பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VI

பீரங்கிகளை உற்பத்தி செய்வதாக நவாபின் ஒற்றர்கள் தெரிவித்திருந்தார்கள். இம்முயற்சிகளெல்லாம் தானே மதுரையின் மன்னனாக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளே என்று நவாபு நினைத்தான். கம்பெனியின் நிருவாகத்திலிருந்து தம்முடைய நிருவாகத்திற்குக் கான்சாகிபை மாற்றிவிட வேண்டுமென்று கம்பெனியை நவாபு வேண்டிக்கொண்டான். இவ்வேண்டுகோளைக் கம்பெனி ஒப்புக்கொண்டது. ஆனால் கான்சாகிபு நவாபின் மேலதிகாரத்திற்குள் வர மறுத்தான். நவாபு, கான்சாகிபுவை சுபேதான் பதவியிலிருந்து நீக்கவும், மதுரை ஆட்சியைத் தானே கைப்பற்றவும், ஒரு படைக்குத் தானே தலைமை தாங்கித் தெற்கு நோக்கி வந்தான். அதற்குத் துணையாகக் கம்பெனியும் ஒரு படையை அனுப்பிவைத்தது.

இவ்விரண்டு படைகளுக்கும் ‘பிரிட்டன்’ என்ற ஆங்கிலத் தளபதி தலைமை தாங்கினான். அவர்கள் திருப்புவனத்திற்கு வந்து கான்சாகிபுவின் தாக்குதலை முறியடிக்க முயன்றார்கள். கான்சாகிபு இரவில் இப்பெரிய படையைத் தாக்கிவிட்டு பகலில் ஓடிச்சென்று மறைந்து கொள்வான். இது தற்காலத்தில் கொரில்லாப் போர் என்றழைக்கப்படுவது போன்றது. திருப்புவனத்தில் தங்கியிராமல் நேராக மதுரை செல்வது என்று நவாபும் பிரிட்டனும் முடிவு செய்தனர். பல மாதங்கள் நவாபின் படையும், கம்பெனிப் படையும் மதுரைக் கோட்டையை முற்றுகையிட்டன. கோட்டைச் சுவரின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் உடனே அது சீராக்கப்பட்டது. ஆறு மாதங்கள் முற்றுகை நீடித்தது. போரால் சாதிக்க முடியாததைப் பொன்னால் சாதிக்கத் தாண்டவராயன் முடிவு செய்து மதுரைத் தளவாய் சீனிவாச ராவுக்கும், மார்ச்சண்டுக்கும் லஞ்சம் கொடுத்துத் தந்திரமாகக் கான்சாகிபுவைப் பிடித்துக்கொண்டு வரச் செய்தான். கோட்டைக்கு வெளியில் கொண்டுவந்து அவனைத் தூக்கில் இட்டார்கள்.

கான்சாகிபு மதுரைச் சுபேதாரான பிறகு ஏழு வருஷங்கள் மதுரையில் ஆட்சி செலுத்தினான். அதன் பிறகு நவாபோடும் கம்பெனியோடும் பகைமை கொண்டு போர் நடத்தி வஞ்சகமாகச் சிறைப்படுத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான். இந்தக்கால நிகழ்ச்சிகளைத்தான் கதைப்பாடல் கூறுகிறது.

ஆனால் மதுரைச் சுபேதாராவதற்குமுன் தென்பகுதிச் சீமைகளில் அவன் நடத்திய போர்களின் முடிவால் தென்பகுதிச் சீமையில் வரலாற்றில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. அவனுடைய வரலாற்றுப் பாத்திரத்தை அறிந்துகொள்ள அந்நிகழ்ச்சிகளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.