பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VII

அவன் பிரிட்டிஷ் படைப் பிரிவின் தலைமையை ஏற்ற காலத்தில் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து பரங்கிப் பேட்டையிலிருந்து அவர்களை விரட்டினான். இந்த வெற்றியின் காரணமாக அவனைக் கம்பெனியார், வரி வசூலிப்பது மிகக் கடினமாக இருந்த தென்பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். அச்சமயம் தென்பகுதியில் ஆற்காட்டு நவாபு பதவிக்காக இரு போட்டியாளர்களிடையே போர் நடந்து வந்தது. அவர்களுள் ஒருவன் சந்தாசாகிபு, மற்றொருவன் முகம்மதலி. திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டு முகம்மதலி தன்னை ஆற்காடு நவாபென்று பிரகடனம் செய்து கொண்டான். பிரெஞ்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களது ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொண்டனர். பிரெஞ்சுக்காரர்கள் சந்தாசாகிபுவை ஆதரித்தார்கள். ஆங்கிலேயர்கள் முகமதலியை ஆதரித்தனர்.

திருநெல்வேலிச் சீமையில் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக முகம்மதலி, அப்துல் ரகீம் என்ற படைத் தலைவனது தலைமையில் இரண்டாயிரம் வீரர்களை அனுப்பினான். அவர்களுக்கு உதவியாக இன்னிஸ் என்ற ஆங்கிலக் காப்டனுடைய தலைமையில் இரண்டாயிரம் வீரர்களைக் கம்பெனியார் அனுப்பி வைத்தனர். சந்தாசாகிபுவின் பிரதிநிதியென்று தன்னை அழைத்துக்கொண்ட ஆலம்கான் என்பவன் திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருந்தான். காப்டன் கோப் என்ற ஆங்கிலத் தளபதி முகமதலிக்காக மதுரையைக் கைப்பற்ற முயன்று தோல்வியடைந்தான். பல முறைகள் தோல்வியடைந்த பின்னர், கம்பெனியார் 1755-ல் கர்னல் ஹீரான் என்ற தளபதியும் நவாபின் அண்ணனான மாபூஸ்கானும் பெரும் படையோடு மதுரைக்கு வந்தனர். மதுரை எதிர்ப்பில்லாமல் அவர்கள் கைவசமாயிற்று. ராமநாதபுரம் ராஜா இரண்டு துறைமுகங்களைக் கம்பெனியாருக்கு அளித்துச் சரணடைந்தார். ஹீரானும், மாபூஸ்கானும் ராமநாதபுரம் சீமையை விட்டுத் திருநெல்வேலிச் சீமைக்குச் சென்றனர். போகிற வழியில் பாளையக்காரர்கள் யாரும் எதிர்க்கவில்லை. திருநெல்வேலிச் சீமையிலிருந்த குத்தகைதாரர்கள் பணிந்து வரிப்பாக்கிகளைக் கொடுத்துவிட ஒப்புக்கொண்டனர். ஆனால் பல பாளையக்காரர்கள் நவாபின் சார்பில் கேட்கப்பட்ட கப்பத் தொகையைச் செலுத்த மறுத்தார்கள். இவர்களுள் முக்கியமானவன் பாஞ்சாலங்குறிஞ்சியின் பாளையக்காரன் கட்டபொம்மு நாயக்கன் (இவன் புகழ் பெற்ற கட்டபொம்முவின் பாட்டன்) பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்தெறியும் நோக்கத்தோடு ஒருபடை புறப்பட்டது. ஆனால் திருச்சிக்குத் திரும்பும்படி அதற்கு உத்திரவுகிடைத்தது. போகும் வழியில் கர்னல் ஹீரான் நெல்கட்டாஞ்செவலுக்குச் சென்று அக்கோட்டையை முற்றுகையிட்டான்