பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

VIII

நெல்லைச் சீமையின் மேற்குப்பகுதிப் பாளையங்களுக்கு நெல்கட்டாஞ்செவல் பாளையக்காரன் பூலுத்தேவன் தலைவனாயிருந்தான்.

கர்னல் ஹீரான் நெல்கட்டாஞ் செவல் கோட்டையைப் பிடிக்க முடியாமல் படைகளைப் பின்வாங்கிச் சென்னைக்கு அனுப்பினான். அவன் நெல்லைச் சீமையில் வசூலித்த வரிப்பணம் இப்போர்களுக்காகச் செலவழிந்து போயிற்று. கர்னல் ஹீரான், குத்தகைதாரர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு குறைந்த குத்தகைக்கு திருநெல்வேலிச் சீமை வரிவசூல் முழுவதையும் விடுத்தான். சென்னைக்குத் திரும்பியதும் அவன் மீதிருந்த குற்றச்சாட்டுக்கள் இராணுவ நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டன. லஞ்சம் வாங்கிய குற்றச் சாட்டிற்காக ஹீரான் பதவியிலிருந்து விலக்கப் பட்டான். ஹீரான் பதவியிழந்ததிலிருந்து, திருநெல்வேலிச் சீமையிலுள்ள மறவர் பாளையக்காரர்கள் துணிவு பெற்று மீண்டும் கலகம் செய்தனர். சந்தாசாகிபுவினால் தென்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பட்டாணியப் படை வீரர்கள், மறவர் பாளையக்காரர்களோடு சேர்ந்து கொண்டார்கள். திருவாங்கூர் மன்னரும் 2000 பேர் கொண்ட நாயர் படையை அனுப்பிவைத்தார். மூன்று படைகளும் களக்காட்டில் சந்தித்தன.

பூலுத்தேவன் மேற்குப் பாளையங்களையும் கீழ்ப்பாளையங்களையும் இணைக்கும் நோக்கத்தோடு கட்டபொம்மு நாயக்கனைச் சந்தித்து நவாபை எதிர்க்கும் அணியில் சேர வேண்டிக் கொண்டான். கட்டபொம்முவின் உறவினர்கள் திருச்சி சிறையில் பிணையாகக் கம்பெனியார் ஆதிக்கத்தில் இருந்ததால், கம்பெனியை எதிர்த்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றெண்ணி, நவாபை எதிர்க்கும் அணியில் சேர அவன் மறுத்துவிட்டான். பூலுத்தேவன் அவனது ஆட்சியின் கீழிருந்த பிரதேசங்களைக் கொள்ளையடித்து விட்டு நெல்கட்டாஞ் செவலுக்குத் திரும்பினான். மதுரைப் பாளையங்களும், நெல்லைச் சீமையின் மேற்குப் பாளையங்களும், 24000 வீரர்களைப் படைதிரட்டி விட்டனர். நவாபின் அண்ணன் வசமிருந்த ஸ்ரீவில்லிபுத்தூரைக் கைப்பற்றிக் கோட்டைச் சுவரை இடித்துத் தள்ளினர். இதற்கிடையில் மாபூஸ்கான், கீழ் பாளையங்களான எட்டயபுரத்தோடும் பாஞ்சாலங் குறிச்சியோடும் ஒப்பந்தம் செய்து கொண்டு பெரும் படைதிரட்டிப் பூலுத்தேவனை எதிர்த்தான். திருநெல்வேலிக்கு 7 மைல்களுக்கு வடக்கே இருபடைகளும் மோதின. பூலுத்தேவன் தோல்வியடைந்தான்.

இந்நிலையில்தான் நவாபின் படையோடும் கம்பெனிப் படையோடும் 1758 மே மாதம் கான்சாகிபு திருநெல்வேலிச் சீமையில் வந்திறங்கினான். அவனிடம் பீரங்கிகள் இருந்தன. மதுரைப் பாளையக்காரர்களைத் தோற்கடித்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு