பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கான்சாகிபு சண்டை

முதற்பதிப்பின் முன்னுரை

நாட்டுக் கதைப் பாடல்கள் பல தமிழ் நாட்டில் வழங்குகின்றன. இவை தமிழ் நாட்டின் தென்பகுதியில் வில்லுப்பாட்டு, கணியான் பாட்டு, கூத்து முதலிய கலையுருவங்களில் வழங்கி வருகின்றன. மதுரையில் லாவணி, ஒயிலாட்டம், அம்மானை முதலிய உருவங்களில் வழங்கிவருகிருன்றன, கோவை, சேலம் பகுதிகளில் குறவன் குறத்திப் பாட்டாக இவை வழங்குகின்றன. இக்கதைப் பாடல்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். (1) தெய்வப் புனைகதைகள், (2) புராணக் கதைகள், (3) சமூகக் கதைகள் (4) வரலாற்றுக் கதைகள்.

முதல் வகையான தெய்வப் புனைகதைகள் கிராம தேவதைகளின் பிறப்பையும், வரலாற்றையும் பற்றிக் கூறுவன. முத்தாரம்மன், நீலியம்மன், முப்பிடாதி, கடலைமாடன், கருப்பணசாமி முதலிய தெய்வங்களின் கதைகளை இவை கூறும். இக்கதைகளை இத்தெய்வங்களின் வழிபாட்டு நாட்களான கொடையின்போது பாடுவார்கள்.

இரண்டாவது வகைக் கதைகள் இந்துப் புராணங்களோடு தொடர்புடையவை. நாட்டுமக்கள் கற்பனை, புராணக் கதைகளை உருத்தெரியாமல் மாற்றி விடுகின்றன. மூலக்கதைகளிலுள்ள கதைத் தலைவர்களின் பெயர்களை மட்டும் மாற்றாமல் கதை நிகழ்ச்சிகள் முழுவதையும் கதைப் பாடகர்கள் மாற்றி அமைத்துவிடுகிறார்கள், இத்தகைய கதைப் பாடல்களுக்கு உதாரணங்கள்: ஏணி ஏற்றம், பொன்னுருவி மசக்கை, அல்லி அரசாணி மாலை முதலியன. இவை யாவும் பாரதக் கதையின் கதைத் தலைவர், தலைவியரை நாட்டுக் கதைப்பாடல் பாத்திரங்களாகக் கொண்டவை. ஆனால் மூலக்கதை நிகழ்ச்சிகள் எதுவும் கதைப் பாடல்களில் இல்லை. இவையாவும் அக்கதாபாத்திரங்களைப் பற்றி நாட்டு மக்கள் கற்பனையில் எழுந்த கதைகளே.

சமூகக் கதைப் பாடல்கள், சாதிக் கலப்பு மணம். பெண்களுக்குச் சொத்துரிமை, சாதி அடக்குமுறை, பொருந்தாமணம், சாதி வரலாறுகள் முதலியவற்றைக் கதைப் பொருளாகக் கொண்டவை. முத்துப்பட்டன் கதை, சின்னத்தம்பி கதை, நல்லதங்காள் கதை, பிச்சைக்காரன் கதை முதலியவை இப்பிரிவிற்கு உதாரணங்கள்.