பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

II

வரலாற்றுக் கதைப் பாடல்கள் வரலாற்று நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டவை. ஏதாவது ஒரு போரின் காரணங்கள், நிகழ்ச்சிகள் விளைவுகளைப் பற்றி இக்கதைப் பாடல்களில் பல கூறும். ஒரு கதைத் தலைவனின் கதை பல வரலாற்று நிகழ்ச்சிகளோடு தொடர்புபடுத்தப்பட்டுக் கூறப்படும். பொதுவாக இவை வீரத்தைப் புகழ்ந்து கூறுவனவாக இருக்கும். வீரம் தவிர வேறு குணங்களைப் பற்றியும் இவை புகழ்ந்து கூறலாம். ஒரு தலைவனின் உயர்வைப் புகழ்ந்து பேசுவதே இவ்வகையான கதை பாடல்களின் நோக்கமாக இருக்கும். தமிழ்க் கதைப் பாடல்களிலேயே இவைதான் அபூர்வமாக இருக்கின்றன. தற்காலத்தில் வழங்கிவரும் வரலாற்றுக் கதைப் பாடல்கள் சிலவற்றை நான் படித்திருக்கிறேன். அவற்றுள் சில அச்சாகியுள்ளன. சில இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே உள்ளன. வரலாற்றுக் கதைப் பாடல்கள் சிலவற்றின் பெயர்களை இங்குக் குறிப்பிடுவோம். ஐவர் ராஜாக்கள் கதை, வெட்டும் பெருமாள் கதை, ராமப்பய்யன் அம்மானை, இரவிக் குட்டிப்பிள்ளை போர், சிவகங்கை அம்மானை, சிவகங்கைக் கும்மி, பூலுத்தேவன் சிந்து, கட்டபொம்மன் கதைப்பாடல் முதலியன.

சில வரலாற்றுக் கதைப் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவை எவை என்பதைக் கூறுவோம். ராமப்பய்யன் அம்மானை இரு வெளியீடுகளாக அச்சிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு வெளியீட்டையும், சரஸ்வதி மகாலிலிருந்து கிடைத்த பிரதியை சென்னை அரசினர் கையெழுத்துப் பிரதிகள் வெளியீட்டுக் கழகம் ஒரு வெளியீட்டையும், கொணர்ந்துள்ளன. முதல் வெளியீட்டிற்கு வையாபுரிப்பிள்ளை பதிப்பாசிரியர். இப்பதிப்பின் பிற்சேர்க்கையாக இரவிக்குட்டிப் பிள்ளை போர் என்ற கதைப்பாடல் வெளியாகியிருக்கிறது. சென்னை அரசினர் கையெழுத்துப் பிரதிகள் வெளியீட்டுக் கழகம், சிவகங்கை அம்மானை, சிவகங்கைக் கும்மி என்ற மருது சகோதரர்களைப் பற்றிய கதைப் பாடல்களை வெளியிட்டிருக்கிறது. கட்டபொம்மன் கதைப்பாடல், 1962-ல் என்னால் பதிப்பிக்கப்பட்டது. இவை தவிர, முன்னர்க் குறிக்கப்பட்ட தேசிங்குராசன் கதை, கான்சாகிபு சண்டை போன்றவை, பல பிழைகளோடு முன்னுரை, குறிப்புரை எதுவுமில்லாமல் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கின்றன. வரலாற்றுக் கதைப்பாடல்களில் நான்கை மதுரைப் பல்கலைக்கழகம் வெளியிடுகிறது. அவையாவன: கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்துப்பாடல், ஐவர் ராஜாக்கள் கதை, கான்சாகிபு சண்டை ஆகியவை. இவை சிதைந்துபோன பழைய கையெழுத்துப் பிரதிகளையும், பழைய அச்சுப் பிரதிகளையும் ஒப்பிட்டு