பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. ஒன்றே


நம்முடைய மனம் ஓரிடத்தில் நிலைப்பதில்லை. அது எப்போதும் அலைந்துகொண்டிருக்கிறது. எதை எதையோ நினைந்து கொண்டிருக்கிறது. அவ்வப்பொழுது என்ன என்ன பொருள்கள் வேண்டுமோ அவற்றை நினைக்கிறது. சென்று போன இன்ப துன்ப நிகழ்ச்சிகளை நினைக்கிறது. வருங்காலத்தைக் கற்பனை செய்து பார்க்கிறது. இன்னது செய்யவேண்டுமென்று திட்டமிடுகிறது. கிடைத்ததை நினைந்து மகிழ்ச்சி அடைகிறது. கிடைக்காததை எண்ணித் துன்பம் அடைகிறது.

மாறி மாறி நினைப்பது மனத்தின் இயல்பு. ஒன்றை விட்டு மற்றொன்றை அவாவதுவும் அதற்கு இயல்பு. மனம் வாயுவின் அம்சமாதலின் எப்போதுமே அலைந்துகொண்டே இருக்கும்; எதையாவது நினைத்துக்கொண்டே இருக்கும்.

அந்த நினைப்பில் ஏதாவது ஒழுங்கு உண்டா? அதுதான் இல்லை. நம்முடைய அலுவலகத்தைப் பற்றிய நினைவில் சிறிது நேரம் மூழ்கும், திடீரென்று முதல் நாள் செய்தித்தாளில் படித்த செய்தியை நினைக்கும். மாமனாரை நினைக்கும். அடுத்தபடி எங்கோ கண்ட பன்றிக்குட்டியின் நினைவு வரும். மாமனருக்கும் பன்றிக்குட்டிக்கும் என்ன தொடர்பு? தேவாரப் பாடலை நினைத்துக்கொண்டிருக்கும். உடனே மூட்டைப்பூச்சிக் கடி நினைவுக்கு வரும். இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?