பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மாறாத இன்பம் பெற்று மகிழ்ந்தார். நமக்கு அரியது ஒன்று உண்டா? என்று பெருமிதத்தோடு சொல்கிறார்.

"—எனக்கு அவனைக் கொண்டேன்
பிரானாக: கொண்டதும் இன்புற்றேன்;
உண்டே எனக்கு அரியது ஒன்று”

அரியவற்றிலெல்லாம் அரிய பொருள் பரம்பொருளாகியவன் இறைவன். அவனைப் பெற்ற பிறகு அரியது என்பது ஒன்று உண்டோ? பத்து ரூபாய்க்கு ஏங்கினவன், கோடி ரூபாய் பெற்று விட்டால் பத்துக்கோ நூறுக்கோ ஏங்கும்படி இருக்குமா?

இந்த மனநிறைவோடு பாடுகிறார் காரைக்கால் அம்மையார்.

"எனக்(கு) இனிய எம்மானை, ஈசனை யான்என்றும்
மனக்(கு) இனிய வைப்பாக வைத்தேன் – எனக்கு அவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்ளலுமே இன்புற்றேன்
உண்டே எனக்(கு)? அரியது ஒன்று?”

[என் உயிருக்கு இனிமை தரும் எம்பெருமானாகிய ஈசனை யான் என்றைக்கும் மனத்துக்கு இனிய பெருஞ்செல்வமாகப் பொதிந்து வைத்தேன். அவனையே எனக்கு உரிய பிரானாகக் கொண்டேன்; அப்படிக் கொண்டவுடன் நான் மாறாத இன்பத்தை அடைந்தேன். இனிமேல் எனக்குக் கிடைப்பதற்கு அரியதாகிய பொருள் ஒன்று உண்டோ?

எம்மானை-என் கடவுளை, மனக்கு-மனத்துக்கு, வைப்பளுசேமிக்கும் செல்வம், பிரான்-உபகாரி; தலைவன், கொள்ளலுமே-கொண்டவுடன், உண்டே-உண்டோ?]

இறைவனை மறவாமல் மனத்தில் இருத்தி அன்பு செய்பவர்களுக்குத் துன்பம் அகன்று இன்பம் வரும் என்பதும் அவர்களுக்கு ஒன்றாலும் குறைவு இராது என்பதும் இதன் இதன் கருத்து.

இது காரைக்காலம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதியில் பத்தாவது திருப்பாடல்.