உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கார்மேகக் கோனார் கவிதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



III. துணைவேந்தர் லட்சுமண சாமி முதலியார் அவர்களை வரவேற்றுப் பாடிய பாடல்

சீருந் திருவு மிகுந்து சென்னை திகழும் பல்க லைக்கழகச்
சிறப்பார் துணைவேந் தர்பதவி தேடியடைய வுவந்தேற்றங்
காரும் புகழ இந்நாளில் அரியாதனத்தி லமர்ந்திடுமெம்
அதிபா!வருக அரசர்புகழ் அறிவோய்! வருக அருந்தமிழும்
ஒரு மேன்மை யாங்கிலமும் உயரும் மருத்து வக்கலையும்
உணர்ந்தோய் வருக! கற்றவர்கட் கொருதாய்வருக! உயர்வனைத்தும் சாரும் டாக்டர் லட்சுமண சாமி வருக! சபைக்கினிமை
தருவோய் வருக! தமிழ்நாட்டின் தவமே வருக வருகவே!

IV.எங்கள் நாடு

1 சங்கம் வைத்துத் தமிழ்பயின்று தகைமைபெறு நாடு
தலைமைமிகு புலவர்தமைத் தந்ததிரு நாடு
வங்கமிசைக் கடல்கடந்து வளங்கொணர்ந்த நாடு
வகுத்தஅறம் பலபுரிந்து வயங்குகின்ற நாடு
துங்கமிகும் வீரர்தமைத் தோற்றுவித்த நாடு
துகளறுசீர்ப் போர்முறையால் தூய்மைபெறு நாடு
எங்குமெழிற் பொழில் சூழ்ந்து ஏர்திகழும் நாடு
எவ்வளமும் கொழித்தயார் இசைக்குமிசை நாடு

2. கைத்தொழிலும் வாணிகமும் கதித்துவளர் நாடு
கவின்கலையும் உழுதொழிலும் கனிந்துமிளிர் நாடு
முத்தமிழின் இனிமையெலாம் முழுதுணர்ந்த நாடு
மூவேந்தர் குடைநிழலில் முன்பமர்ந்த நாடு
வைத்தநிதி வறியவர்க்கே வழங்குவண்மை நாடு
வானவரும் தானவரும் வந்திறைஞ்சும் நாடு
எத்திறத்தும் உவமையிலா திலங்குதமிழ் நாடு
எத்திசையும் இசைமணக்க இருந்த வெங்கள் நாடே

V.தமிழ்த்தாய் வாழ்த்து



1. தென்னருயிர் போல்வளர்த்த செந்தமிழ்த்தா யேயுனது
பொன்னடியை யாம்வணங்கிப் புகழ்ந்துநனி வாழ்த்துதுமே

2. உலகிலுள்ள மொழிகளுள்ளே உயர்தனிச்செம் மொழியாக
இலகிமிகச் சீர்படைத்த இருந்தமிழ்த்தாய் வாழ்த்துதுமே