பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 காலந்தோறும் பெண் இதேபோல் ஒரு மனிதனுக்கு தாசியிடம் பிறக்கும் மகனுக்கும் சொத்துரிமை, மற்றும் நீர்க்கடன் உரிமை வழங்கப் பெற்றிருந்தால்தான் அந்த வழக்குச் சொல்லும் இன்று வசைச் சொல்லாக மாற்றம் பெற்றிருக்கிறது. ருக்வேத காலத்திலிருந்து, தரும சூத்திரங்கள் நெறிப்படுத்தப்பட்ட காலங்களில் அதாவது, கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னுறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், பெண்ணின் மதிப்பு திருமணம் சார்ந்தும், கல்வி மறுக்கப்பட்டும் மிகவும் இழிந்துவிடவில்லை. பிறகு குழந்தை மணம், நெறிப்படுத்தப்பட்டதும் உபநயனச் சடங்கு வெறும் பாவனையாகி வேண்டியதே இல்லை என்று தீர்ந்து, இன்னும் ஒரு கீழ் நிலையில், கல்விக்குரியவள் இல்லை என்றும், கணவனைத் தவிர வேறு பற்றுக்கோலே இல்லை என்றும், படிப்படியாகக் குருடியாக்கப்பட்டாள். இதற்குரிய நெறிகள் முந்தைய ஆசிரியர்களின் பெயரிலே முரணாக இணைக்கப்பட்ட காலங்களில், இந்தக் கீழ் முகத்தை எதிர்த்துப் போராடியவர்களும் இருந்திருக்கிறார்கள். காதம்பரி என்ற நாவல் போன்ற காவியத்தை எழுதிய பட்டபாணர், பெண்ணை நெருப்பில் போடும் உடன்கட்டையை எதிர்த்துப் போராடியிருக்கிறார். பெண்ணை எரிப்பதும், கைம்மைக் கொடுமையில் அழுத்துவதும் கொலைக்குரிய பாவம்' என்று உரைத்திருக்கிறார். தந்திரவாதிகளும், (மஹா நிர்வாண தந்திரம்) பெண்ணை தெய்வீக வடிவினள் என்று போற்றி, அவளைச் சிதையில் வைத்து எரிப்பவர்கள் மிகக் கொடிய நரகத்துக்குரியவர்கள் என்று இயம்புகின்றனர். இவ்வாறு, சதியும் கைம்மைக் கொடுமையும் வலுப்பெற்று, கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, பத்தாம் நூற்றாண்டு கால கட்டத்தில் முழுதுமாக நெறியாகித் தீர்ந்து போயிற்று.