பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 காலந்தோறும் பெண் அடுத்து யஜுர்வேதம், ருக்வேத காலத்துக்கு ஏறக்குறைய ஒன்றிரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும், அதர்வன வேதம் இன்னும் பிந்தியும் முறைப்படுத்தப்பட்டதாகவும் ஊகிக் கின்றனர். இவற்றுள் முந்தைய யஜுர்வேதம், யாகங்கள் செய்யும் முறைகளைப் பற்றிய முக்கியமான வழிமுறைகளை முதன்மையாக்கியும், அதர்வண வேதம், மந்திர தந்திரங்கள், மருத்துவ முறைகள் ஆகியவற்றை முதன்மையாக்கியும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. ஸாம வேதம், ருக் வேதத்தைச் சார்ந்த துதிப்பாடல்களே. எனவே, சமுதாய வாழ்க்கை பற்றிய வரலாற்றுச் சான்றுகளை, முதல் வேதமாகிய ருக் வேதப் பாடல்களிலிருந்தே பெற முடிகிறது. இந்தப் பாடல்களில் பெண்கள், ஒளியும் வீரியமும் ஒடுங்கிப்போன இல்லத்துப் பறவைகளாகவோ, உரிமைகளற்ற உடமைப் பொருளாகவோ விவரிக்கப்பட்டிருக்கவில்லை. இக்காலத்தில், சமுதாயம் தந்தை வழிக் குடும்பங்களின் தொகுதிகளாகவே நெறிப்படுத்தப்பட்டுவிட்டன. என்றாலும், சில குடும்பப் பெயர்கள் தாய் வழி நினைப்பூட்டுவதாகவும் இல்லாமல் இல்லை. வேதகால ஆரியர் யார், அவர் எவ்வாறு இந்தியாவுக்கு உரியவராக ஆயினர் என்ற ஆராய்ச்சியே மிக ஆழமானது. ‘ஆரியர்’ என்ற சொல் 'அரி என்ற மூலத்திலிருந்து உருவானது என்றும் அச்சொல்லுக்கு அந்நியர் என்று பொருள் கொள்ளலாமென்றும் கருதப்படுகிறது. இக்குழுவினர் இந்தியாவிற்கு வடமேற்கில் வட்சு நதிக்கரையில் இருந்து காந்தாரத்தில் புகுந்து பாஞ்சாலத்தை நோக்கி முன்னேறி வந்திருக்கலாம் என்றும், இவர்களை இந்தோ இரானியர் என்று குறிப்பிடலாம் என்றும் புகழ் பெற்ற வரலாற்று இலக்கிய ஆசிரியர் ராகுல்சாங்கிருத்யாயன் குறிப்பிடுகிறார். அவருடைய வால்காவில் இருந்து கங்கை வரை என்ற நூலில்