பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

காலமும் கவிஞர்களும்


உருவத்தை மனத்தில் எண்ணுதல், மலைகளிடையேயுள்ள ஒருபள்ளத்தாக்கு, பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் அருவி, அருவியின் அருகேயுள்ள புல்வெளிகளில் மேய்ந்து திரியும் ஆடுமாடுகள், புல்வெளிகளில் ஆங்காங்கு காணப்பெறும் மரவகைகள் இத்தகையவற்றைக் கொண்ட, ஆனால் முன்னால் நேரில் காணாத, ஓர் இயற்கைக் காட்சியை மனத்தில் எண்ணுதல் போன்றவற்றைக் கற்பனை என்று சொல்லலாம். இவை யாவும்பொறிகளால் காண்பவற்றை அடிப்படையாகக் கொண்டவை. பொய்யும் புனைசுருட்டும் நிறைந்த இவ்வுலகில் நல்ல பண்புகளோயெல்லாம் காண இயலாது துடித்து நிற்கும் கவிஞன் அவற்றையெல்லாம் ஒருங்கே கொண்ட இராமன், இலக்குவன், பரதன், சத்துருக்கன் போன்ற காவிய மாந்தர்களைப் படைப்பதும். கற்பனையாற்றலே; இத்தகைய மாந்தர்களை உண்மை உலகில் காண இயலாது. இம்மாதிரியே தீய குணங்களையெல்லாம் ஒருங்கே கொண்ட துரியோதனன், சகுனி, துச்சாதனன் போன்றவர்களையும் படைக்கவும் செய்கின்றான். பொறிகளின் அடிப்படையில் அமையும் கற்பனையைவிட இவை சிறந்த கற்பனை என்றே சொல்லவேண்டும்.

மேற்கூறிய எடுத்துக்காட்டுக்களில் அடங்கிய செயல்கள் யாவும் ஒரே வகையானவை. பல பண்புகள் தேர்ந்தெடுக்கப்பெற்று அவை கலைப் பண்புடன் புதியதோர் வடிவம் அமையுமாறு ஒன்று சேர்க்கப்பெறுகின்றன. இப்பண்புகள் கவிஞன் மனத்தில் சிறிது நேரத்திற்குள் தோன்றுபவை; கவிஞன் அவற்றை மிகவும் வலிந்து ஒன்று சேர்ப்பதில்லை. கவிஞன் மனத்தில் அவை இயல்பாக ஒன்று சேர்ந்து புதிய வடிவங்களாகச் சமைகின்றன. நாமும் - இத்தகைய காட்சிகளைப் பல சந்தர்ப்பங்களில் காணத்தான் செய்கின்றோம்