பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 148


ஐரோப்பியர், 300 சிப்பாய்கள் இரண்டு சிறு பீரங்கிகள் அடங்கிய மற்றொரு படை திருநெல்வேலிக்குத் தெற்கே ஐம்பது மைல் தூரத்தில் அமைந்திருந்த நெல்லிக் கோட்டையிலுள்ள கோட்டையைத் தாக்க அனுப்பப்பட்டது. இப்படைகள் நள்ளிரவில் புறப்பட்டுப் பதினெட்டு மணி நேரத்தில் அவ்விடத்தை அடைந்தன. அவர்களுடைய திடீர்ப் படையெடுப்பால் அதிர்ச்சியடைந்த பாளையக்காரன் ஒரு தூதனை அனுப்பினான். அத்தூதன் அவர்கள் இணங்கியதாகப் பாசாங்கு காட்டி, அவனுடைய எசமான் செலுத்த வேண்டிய கப்பப் பணத்தைச் சில நாள்களில் செலுத்துவதாக உறுதி கூறியதாகவும் தெரிவித்தான். அவன் பேச்சில் ஐயமுற்ற அவர்கள், அவன் வாக்குக் கொடுத்தபடி பணம் செலுத்த வேண்டியதற்குப் பிணையாக அவனைத்தங்களிடத்திலேயே நிறுத்திக் கொள்ளத் தீர்மானித்தார்கள். எனவே, அவன் காவல்காரர்வசம் ஒப்புவிக்கப்பட்டான். படைவீரர்கள் அளவுக்கு மீறி நடந்துவந்ததால் மிக்க அலுப்புற்றிருந்தமையால் முக்கியமான காவற்காரர்களால் கூட விழித்திருக்க இயலவில்லை. தூதன் தன்னைக் காவல் காக்க நியமிக்கப்பட்ட எல்லா வீரர்களும் அயர்ந்து துங்குவதைக் கவனித்துப் பாசறையினின்றும் தப்பி ஒடி கோட்டையை அடைந்தான். ஆங்கிலப் படையெடுப்பை எதிர்க்கத் தேவையான காரியங்களைச் செய்வதற்குப் போதுமான காலத்தை ஏற்படுத்திக் கொள்ளவே இத்தூது அனுப்பப்பட்டது. அதிகாலையில் இச்சூழ்ச்சி வெளிப்பட்டு விட்டமையால் ஆங்கிலப்படை வட்டமான கோபுரங்களையுடைய சாதாரண மண்சுவரால் பாதுகாக்கப்பட்ட அந்த இடத்தை முற்றுகையிட முடிவு செய்தது. அப்படையினர் மதிலில் ஏறுவதற்காக ஏணிகள் கொண்டுவரவில்லை. ஆனால், சுவரின் வெளிப்புறம் சரிவாயும் மழையினால் கரைந்து மேடு பள்ளங்களாயும் இருந்ததால் அந்த இடத்தைத் தாக்குவது அபாயகரமாய் இருந்ததெனினும் இயலும் செயலாகவே இருந்தது. எனவே, படையினர் பல பகுதிகளாய்ப் பிரிந்து ஐரோப்பியர்களும் சிப்பாய்களும் சேர்ந்து அஞ்சாநெஞ்சுடன் ஒரே சமயத்தில் தாக்கினார்கள். ஒவ்வொரு படைப்பகுதியும் எதிர்ப்பின்றி மண்சுவரை அடைந்துவிட்டது. படை கோட்டையிலுள்ள கட்டடங்களை அணுகியதும், அப்படையினருள் காற்பகுதினர் உட்புகுந்தனர். ஆயினும் வழக்கமாகப் பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டபோது தாங்களே தங்களைச் சுற்றி அபாயகரமான சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டதை எண்ணி நிலைகுலைந்து, தங்களுக்கு எதிர்ப்பட்டவர்களை ஆண் பெண் குழந்தைகள் என்றுகூட வேறுபாடு பாராது எல்லாரையும் வாளுக்கிரையாக்கினார்கள்.

நானூறு பேர்களில் ஆறு பேர்களைத் தவிர, மற்ற எவரையும்