பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 164


சொல்லின் ஆங்கிலேயர் மொழி பெயர்ப்பு, சிலசமயங்களில் ‘கலாரிஸ்’ என்றும் அடிக்கடி ‘கோலரிஸ்’ என்றும் அமைந்திருந்தது. அவர்களைப் போன்ற பிரிவு மக்களை எங்குக் கண்டாலும் ஆங்கிலேயர்கள் அவர்களை இதே பெயரால் வழங்கி வந்தார்கள். ஆனால், பாளையக்காரர் கோட்டைகளைக் காவல் புரிந்து கொண்டும் கொள்ளைப் பயணங்கள் செய்து கொண்டும் இருந்த திருநெல்வேலிப் பாளையக்காரருக் குட்பட்ட படையினர் கள்ளர் சாதியைச் சேர்ந்தவரல்லர். ஆனால், பொதுவாக மறவர்கள் அல்லது நாயக்கர்களைச் சேர்ந்தவர்கள். பாளையக்காரர்கள் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனைப் போல நாயக்கனாய் இருந்தால், அவனைச் சேர்ந்த படைவீரரும் அதிகமாக நாயக்கர்களாயிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. பூலித்தேவர் (மறவர்களின் சாதிப்பெயர் தேவர் என்பது) போன்றவர்களுக்குட்பட்ட வீரர்கள் முக்கியமாக மறவர்களாயிருந்தார்கள்.

வீரமறவர்கள்

இந்த வகுப்பினரின் பல பிரிவுகளையும் பகுதிகளையும் பற்றி ஆங்கிலேயர் எவ்வித வேறுபாட்டையும் அறிந்து கொள்ளவில்லை. ஆனால், இவர்கள் போர்களில் காட்டிய துணிவும் தீரமும் ஆங்கிலேயர் உள்ளத்தைக் கவர்ந்தன. திருநெல்வேலி மேற்கு மலைகளுக்கருகேயுள்ள மாவட்டங்களிலிருக்கும் கோலரிஸ்களைப் பற்றிய ஓர்மின் விளக்கம் வருமாறு:

'திருநெல்வேலி நாட்டின் இப்பகுதியைச் சேர்ந்த கோலரிஸ்கள் இந்தியக் காட்டு மலைவாசிகளைப் போன்று உறுப்புக் குறைபாடு அல்லது அழகற்ற தோற்றம் முதலியவை இல்லாதவர்கள். அவர்கள் உயரமும் உடற்கட்டும் நல்ல முகத்தோற்றமும் உடையவர்கள். ஈட்டி, வேல், வில், அம்புகள், பழங்காலத்துத் துப்பாக்கி முதலியவைகள் அவர்களுடைய ஆயுதங்கள். இந்த ஆயுதங்களல்லாமல் ஒவ்வொரு மனிதனும் ஒரு கத்தியும் கேடயமும் எப்பொழுதும் வைத்திருப்பான். போரின் போது வெவ்வேறு ஆயுதங்கள் தரித்த வீரர்கள் தனித்தனியே நின்று போர் செய்வார்கள். ஈட்டிவீரர்களே மிக்க வீரம் வாய்ந்தவர்கள். எல்லாத் தாக்குதல்களையும் அவர்களே நடத்துவார்கள். ஈட்டிகள் 18 அடி நீளமுள்ளவை. ஈட்டியின் கூர்முனையில் ஒரு குஞ்சமாவது சிவப்பு நிறக் குதிரை நிறமாவது கட்டியிருப்பார்கள். குதிரைகளைத் தாக்கும் போது அதனுடன் சிறுமணியையும் கட்டி விடுவார்கள். முன் அசைவு எதுவும் இன்றி அவர்கள் நெருக்கமாக வரிசையாய் நின்று சேர்ந்து நெருங்கி நீண்ட அடிகள் வைத்து முன்னேறுவார்கள். சிறிது நேரத்தில் ஈட்டிகளை உயரத்தில் தூக்கி ஒரு கோணத்தில் சாய்ந்து எறிவார்கள்.