பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165 கால்டுவெல்


அவை விசையுடன் கண்சிதறும்படி கிணுகினு என்ற ஒலியுடன் பாய்ந்து குதிரை வீரரைத் தாக்கும். துப்பாக்கி வீரர்களிடம் இவ்வீரரின் தாக்குதல் அபாயமற்றது.

இங்குக் கூறப்படும் ஈட்டி, தமிழில் வேலாயுதம் என்று வழங்கப்படும். அப்பெயர் இன்றும் நிலைத்திருந்தபோதிலும், அத்தகைய பயங்கர ஆயுதத்தின் மாதிரி ஒன்றை இப்பொழுது காண்பது அரிது. (அண்மையில் மதுரைப் பல்கலைக் கழகத்தில் புது வரலாற்றுத் துறை சார்பில் நடந்த கருத்தரங்கில் தென்பாண்டி நாட்டுப் பழம் போர்க்கருவிகளைத் தொகுத்து வைக்கும் பொருட்காட்சி சாலை வேண்டும் என்று குறிப்பிட்டேன் - ந.ச.).

காவல் உரிமை

பாளையக்காரர்கள் தங்கள் வலிமையை அதிகப்படுத்துவதற்குக் காவல் உரிமையைச் சிறந்த வழியாகக் கடைபிடித்து வந்தார்கள். பழங்காலந்தொட்டு ஒவ்வொரு கிராமத்திலும் காவல்காரர்கள் இருப்பார்கள். காவற்காரர் என்பது ஆங்கிலத்தில் ‘காவல் கார்ஸ்’ என்று எழுதப்பட்டு வந்தது. இவர்களுக்கு ஊதியமாகச் சிறுதொகை கொடுக்கப்பட்டு வந்தது. இக்காரியத்தைச் செய்யும் உரிமையும் அதிகமான சம்பளமும் வேண்டினவர்கள் பாளையக்காரர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும். அவர்கள் வேண்டுகோள் மிகத் தாராளமாக நிறைவேற்றப்பட்டது. இதனால் 1799 இல் திருநெல்வேலியிலுள்ள 2113 கிராமவாசிகளில் 1635 காவல்கள் பாளையக்காரர்கள் வசமிருந்ததைக் கண்டார் வாஷிங்டன். பாளையக்காரர்கள் தங்களைச் சேர்ந்தவர்களைக் கிராமக் காவலுக்கு நியமிக்க முடியாதபோதெல்லாம், மற்றவர்களால் நியமிக்கப்பட்ட காவல்காரர்களின் மேல் அதிக ஆண்டு வரியை விதித்தார்கள். கிராமக் காவலுடன் பாளையக்காரர்கள் திசைக் காவல் அல்லது மாவட்டக் காவலையும் செய்ய வேண்டுமெனக் கொடுமையான கட்டளையிட்டது. இத்திசைக் காவல் ஆங்கிலேயரால் தேசக் காவல் என்று தவறுதலாகச் சொல்லப்பட்டு வந்தது (ஆங்கிலேயர் தவறையும் காட்டுகிறார் கால்டுவெல்! - ந.ச.). இது காவற்காரன் கிராமத்தைக் காவல் காப்பதோடு சாலைகளையும் தரிசுகளையும் காவல் காப்பதற்கு மட்டுமே இந்தச் சம்பளம் முதலில் கொடுக்கப்பட்டு வந்திருக்கலாம். அப்பொழுது கேட்கப்பட்ட இச்சம்பளத் தொகையும் முதலில் குறைவாய் இருந்ததால் எதிர்ப்பின்றி இது கொடுக்கப்பட்டது. தம் காலத்தில் கேட்கப்பட்ட தொகையில் பத்தில் ஒரு பாகமே முதலில் கொடுக்கப்பட்டு வந்ததென வாஷிங்டன் 1799 இல் கூறியிருக்கிறார்.