பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 202


ஆழ்வார் திருநெல்வேலிக்குத் தென்கிழக்கே 20 மைல் தூரத்திலுள்ள மணப்பாறையில் இறங்கின. கிழக்கு ஊர்களிலிருந்து மகமது யூசுபு முன்னமேயே துருப்புகளை வரவழைத்துவிட்டான். அவன் 4000 சிப்பாய்களுடனும் சில குதிரைவீரருடனும் ஆழ்வார் திருநெல்வேலியிலுள்ள டச்சுத் துருப்புகள் கண்ணுக்குத் தெரியுமிடத்திற்கு ஜூன் 18 ஆம் தேதி மாலை போய்ச் சேர்ந்தான். அன்று மாலையே டச்சுக்காரர் சிறிதும் ஆரவாரமின்றித் தூத்துக்குடிக்குத் திரும்பி விட்டனர். மணப்பாறையிலுள்ளவர்களும் அவர்கள் வந்த கப்பலிலேயே திரும்பிச் சென்றுவிட்டனர். பின்னர் இக்குழப்பத்தைப் பற்றி நாம் எதுவும் கேள்விப்படவில்லை.

யூசுபுகானுடைய திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன

'பாளையக்காரர்களின் கொள்ளைகள் தொடர்ந்து நடந்தன. ஆனால் மக்புசுகானால் மறுக்கப்பட்டுப் புதுச்சேரி எவ்வாறு கொடுமையாக முற்றுகையிடப்பட்டதென்பதை அறிந்த பின் பாளையக்காரர் துணிகரமானக் கொள்ளைகளில் ஈடுபடவில்லை. வழக்கம்போல் பூலித்தேவரின் கூலிப்படைகள் கொள்ளையடிப்பதில் மிகச் சுறுசுறுப்பாக இருந்தன. அவர்களை அடக்க மகமது யூசுப் அவனுடைய படையின் பெரும்பகுதியை நெற்கட்டுஞ்செவ்வலில் மறுபடியும் நிறுத்திவைத்தான். அப்படை டிசம்பரில் இங்கிருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள மலையடிவாரத்தில் கூடாரமடித்தது. மகமது யூசுபு திருநெல்வேலியிலிருந்து 12 ஆம் தேதி வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அவன் துத்துக்குடியில் அநேக 18 பவுண்டு எடைக் குண்டுகளையுடைய பீரங்கிகளை வாங்கி வந்தான். அன்றியும் சென்ற ஆண்டில் அன்ஜன்கோவிலிருந்து வந்த இரண்டு சட்டிப் பீரங்கிகளையும் கொண்டு வந்தான். ஆனால் இவைகளுக்கான வெடிமருந்தோ வெடிகுண்டுகளோ இல்லை. அன்றியும் துப்பாக்கி மருந்து வெடிகுண்டுகள் இவைகளைத் திருச்சியிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவைகளுக்காகக் காத்திருந்தபோது அவன் நெற்கட்டுஞ்செவ்வலைத் தாக்க அந்நாட்டில் உண்டான வசதிகளைக் கொண்டு தயார் செய்து கொண்டிருந்தான். அந்த மாதம் 20 ஆம் தேதி பூலித்தேவரின் தலைமையில் கூலிப்பட்டாளம் வழக்கம்போல் மகமது யூசுப்பின்படை இருப்பிடங்கள் எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் 100 கூலிப்படை ஆட்கள் இறக்கும்வரை தாக்கினர். ஆனால் மகமது யூசுபின் 10 ஆட்களைக் கொலை செய்து 50 பேர்களையும் சில குதிரைகளையும் காயப்படுத்தினர்.

தீவினையாக, ஒர்மின் வரலாறு இங்குத் தடைப்பட்டுவிட்டது.