பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17 கால்டுவெல்

வருகின்றன; வட இந்தியாவில் இச்சங்குகள் அணிகள் (நகைகள்) செய்யத்தக்க பொருளாக மிகுதியாய்ப் பயன்படுகின்றன. சோலன் நதி ‘பெட்டிகோ’ (Bettigo) மலையில் தோன்றுகிறது என்று கிரேக்கர்கள் கூறுகிறார்கள். தாமிரபரணி ஆறு பிறக்கும் ‘பொதிகை மலை’யையே இந்தப் பெயர் குறிப்பதாக அவர்கள் எண்ணியிருக்க வேண்டுமென்று ஊகிக்கலாம். இது வாயிலாக ‘மலயம்’ என்று புராணங்கள் கூறுவதுபோலக் கிரேக்கர்கள் ‘பெட்டிகோ’ என்று குறிப்பிடும் தாமிரபரணி உற்பத்தியாகும் மலையைத் தென்மலைத் தொடர்ச்சியோடு இனம் கண்டு கொள்ள ஏதுவாகிறது. (ஒரு ஆற்றைப்பற்றி எவ்வளவு விவரங்களை ஆசிரியர் தேடித் தருகிறார் என்பது ஆராய்ச்சி மாணவர் எண்ணிப் பார்த்துப் பின்பற்ற வேண்டிய ஒன்று. அடியேன் ‘ஆறும் பேரும்’ பற்றி எழுதிவரும் ஆராய்ச்சி நூல் விரைவில் வெளிவரும். இதற்கிடையில் ‘கலைக் களஞ்சியம்’ (V:575) (6, 5, 8) தரும் பின்வரும் குறிப்பு காணத்தக்கது: ‘நம்மாழ்வார் பொருநல் வடகரை’ தொலைவில்லிமங்கலம் என்று பொருநையைப் பொருநல் என வழங்குகிறார். ‘பொருந்தம்’ என்பதே ‘பொருநை’ என மருவியது. பொருந்தம் என்பது பொருந்துதல் என்னும் பொருளதாக இருக்கலாம். பெரிய புராணத்தில் பாண்டியநாட்டைத் ‘தண்பொருந்தப் புனல்நாடு’ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். முதல் இராசராசனுடைய 28ம் ஆண்டு (1013) வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றில் சீவலப்பேரியை அடுத்துச் சித்திரா நதி கலக்கும் தாமிரபருணி நதிப்பகுதி தண்பொருந்தம் என்று வழங்கியுள்ளது ந.ச.).

சேர சோழ பாண்டியர்

வடமொழியில் திராவிடர்கள் என்று வழங்கப்படும் தமிழ் மக்கள் பழைய காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் என்ற மூன்று பெரும் பிரிவினராய்ப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். இப்பெயர் வரிசையால் நாடு தட்பவெப்ப நிலையை ஒட்டியே பிரிக்கப்பட்டிருந்தது என்பது தெரிகிறது. (சே-சோ-பா என்ற அகரவரிசை காரணமாகவும், மூவருள் சேரர் முதியோர் என்பதாலும் இருக்கலாம். புறம் - 2 - ந.ச.), மேலும், இதனால் அக்காலத்து நிலைமையில் பாண்டியர் மிக உயர்ந்த நிலையிலிருந்தனர் என்பது ஊகிக்க இயல்கிறது. இவ்வூகம் உண்மைக்கு உகந்ததாகவும் தோன்றுகிறது. தமிழ் மொழியிலுள்ள கதைகளின்படி சேர சோழ பாண்டியர் மூவரும் உடன் பிறந்தார்; (‘உடன் பிறந்தே கொல்லும் நோய்!’ - ந.ச.). தாமிரபரணி கூடுதுறையிலுள்ள கொற்கையில் இம்மூவரும் முதன்முதல் ஆட்சி செலுத்தி வந்தனர். கொற்கைக்கருகிலுள்ள முக்காணி (மூவர் சொத்து) என்ற இடத்தில்