பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

263 கால்டுவெல்

 முடியாதென முடிவாக மறுத்துவிட்டான். கலெக்டராலும் அவனைக் கீழ்ப்படியவைக்க இயலவில்லை. ஜியார்ஜ் பவனேயின் ஆட்சியில் திருவில்லிப்புத்தூரின் மேல் படையெடுத்துச் சென்ற காப்டன் டெய்ட்டனும் தீமை அணுகி வருகிறதென்றும் பாளையக்காரர்களின் படைக்கலங்கள் தாங்கிய கூலிப்படைகள் அன்றாடம் நடமாட்டம் செய்வதாயும் அரசாங்கத்திற்குத் தெரிவித்தான். ஆனால் அதைத் தவிர்க்க அரசாங்கத்தினிடம் போதிய படை இல்லை. அரசாங்கத்தின் செயலின்மையைக் கோழைத் தனமென பாளையக்காரர்கள் கருதினர். எனவே 1898 இல் கட்டபொம்ம நாயக்கனின் ஆள்கள் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம் முதலிய முக்கியமான நகரங்களைத் தாக்கிக் கொள்ளையடித்து ஒவ்வொரு நகரத்தின் முக்கிய மக்களையும் தூக்கிச் சென்றனர்.

அரசாங்கத்தினரால் காட்டப்பட்ட கோழைத்தனம் மட்டுமின்றி, அவர்களைக் கீழ்ப்படியவைக்க அதற்குப் போதிய திறமின்மையாலும், அவர்கள் திரு. லாண்டனை மேஜர் ஸ்டீவன்சனின் உதவியோடு மிகப் பெரிதாய் நிகழக்கூடிய தொல்லையைத் தவிர்க்கத்தக்க வழியை நிறைவேற்றத் தீர்மானிக்கும்படி வேண்டினர். அதாவது பாளையக்காரர்களை எப்படி படைக்கலனற்றவர்களாக்க வேண்டுமென்ற இந்தச் செய்தி இந்தக் காலம் முதலாக அடுத்தடுத்து வந்த அரசுகளின் கருத்தை நிரப்பிக் கொண்டிருந்தது. ஆனால் பத்தி பத்திகளாக எழுதுவதைத் தவிர வேறு ஒன்றும் நடை முறையில் ஏற்படவில்லை. அவர்கள் எண்ணத்தைக் காரியத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 1799 இல் மேஜர் பானர் மன்னின் படையெடுப்பு முடியும்வரை இதே நிலைமை நீடித்தது. பாளையக்காரர்களின் திசைக் காவல் அல்லது மாவட்டக்காவல் சம்பளத்தைப் பற்றிய அவர்களின் உரிமைகளை விசாரித்து அறிவிக்கும்படி அரசு திரு. லாண்டனைக் கேட்டுக் கொண்டது. இந்தச் சிக்கல் காலப்போக்கில் அளவில் பெருகிற்று. ஆனால் 1801 இல் திரு. லூஷிங்கனின் ஆட்சியில் நாடு முழுவதும் கம்பெனியின் வசமாகும் வரை இது பற்றி எவ்வித முடிவிற்கும் வரவில்லை.

1794: கர்னல் காம்பெல் பாளையங்கோட்டைப் படைத்தலைவனாயிருந்தான். வரிவசூல் கழகம் கலகக்காரர்களின் முன்னேற்றத்தால் அச்சுற்று, பாளையக்காரர்களை அடக்குவதற்காகத் திருநெல்வேலியின் பல பாகங்களிலும் துருப்புகளின் படைப்பகுதிகளை நிறுத்திவைக்கக் கட்டளையிடும்படியாக அரசாங்கத்திடம் பரிந்துரைத்தது. இந்தப் பரிவுரை சொல்லளவிலேயே நின்றுவிட்டது. செயலாக வில்லை.

இந்த ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி திரு. லாண்டன் இறந்தார்.