பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

முன் அல்லது சொல்லொலிச் சாரியையாக வருகின்றது. அட்டவணைகளில் உனக்கு என்னும் பொருளில் நினிக்க(நின் -இக்க) என்னும் சொல்லுடன் கன்னடம் நினகெ (நின்-அ-கெ) மலையாளம் நினக்கு (நின்-அ-க்கு) என்பவற்றை ஒப்பிட்டு நோக்குக.

(5) அட்டவணைகளிலுள்ள இடப்பெயர்களின் இரண்டாம் வேற்றுமை உருபு உன், இன், ன் என்பவையாம். இத்துடன் தெலுங்கு உருபு னு, னி என்பதையும், கன்னடம் அம், அன்னு (அன்ன்-உ) என்பதையும் ஒப்பிட்டு நோக்குக. (6) அட்டவணைகளில் வரும் எண்ணுப் பெயர்களில் எழுத்தில் எழுதிய பெயர் ஒன்று என்னும் பொருளில் வரும் கிர் என்ற சொல் மட்டுமேயாம். இஃது உண்மையில் பெயருளிச்சொல் வடிவத்திலேயே (அஃதாவது பண்புத் தொகையாகவே) எழுதப்பட்டிருத்தல் வேண்டும். தெலுங்கில் இவ்வடிவம் ஒக-என்பதும், தமிழில் ஒர்-என்பதும் ஆகும். கு-மொழியில் தமிழ் ஒரு என்பதற்குச் சரியான சொல் ர என்பதாம். இக் கு மொழியின் வடிவத்திற்கு அட்டவணையிலுள்ள பிறிதொரு வடிவமாகிய ர அல்லது இர்ர மிகவும் நெருங்கியதாகும்.

அட்டவணையில் எண்ணுப் பெயர்கள் பெயரடையாகும் பொழுது இம் என்ற சாரியையைக் கொள்ளுகின்றன. இது தமிழ் ஆம் என்பதையும் ஸாமோயியத் இம் என்பதையும் நினைவூட்டுகின்றது.

(7) திராவிட மொழிகளிலும், அட்டவணையிலும் முன்னிலைப் பெயர் ஒன்றே. இவை இரண்டிலும் எழுவாய் நீ; பிறவேற்றுமைக்கு முன்னைய முதல் வடிவு நின் என்பதாகும். தமக்குக் கீழ்ப்படியிலுள்ளவர்களை அழைக்க முன்னிலை ஒருமையையே வழங்கிவந்த காரணத்தால் இவ்வட்டவணைகளில் முன்னிலைப்பன்மை காணப்படவில்லை.