பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/126

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள் எந்த இனத்தைச் சேர்ந்தவை?

107

எதுவாயினும் சரி, சித்திய மொழிகளின் இன உறவுகளை ஆராயும் வகையில் இச்செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளல் வேண்டும். நெடுநாள் பிரிக்கப்பட்ட சித்திய இனமொழிகளிடையே அதே இயல்புடைய இந்து - ஐரோப்பிய - மொழிகளில் காணப்படும் நுணுக்கமான ஒற்றுமைகளை. எதிர்பார்க்க முடியாது. திருந்தா மொழிகளிடையே, ஒரு மொழியின் வகைத்திரிபுகளிடைக்கூட மிக விரைவான மாறுதல்கள் ஏற்பட்டு, மாறுபாடும் மிகுதியாய்விட்டதற்கான எடுத்துக் காட்டுகளைப் பேரறிஞர் மாக்ஸ்மூலர் தமது "மொழியியல் சொற்பொழிவுகளில்” குறிப்பிடுகிறார். இதே மாக்ஸ்மூலருக்கு வரைந்த கடிதமொன்றில் பாட்டிஸன் பாதிரியாரும் ' ஒன்றினையொன்று அடுத்துள்ள தீவுகளிரண்டின் மொழிகள் சொல் தொகுதியில் முற்றிலும் வேறுபட்டும், அமைப்பு ஒன்றில் மட்டுமே ஒன்றுபட்டும் காணப்படுவது இயல்பு' என்று இதனேடொப்பக் கூறுதல் காண்க.

ஒரு தனிமொழிக்கு ஒரு மொழியினத்துடன் மூன்று வகையான உறவுமுறை இருக்க முடியும். (1) நேரான கால்வழி முறை (2) உடனியங்குங் துணைமொழி முறை (3) அவ்வினத்துட் சாரும் சார்புமுறை. இவற்றுள் மூன்ரும் உறவு முறையையே திராவிட மொழிகள் சித்திய மொழியினத்துடன் கொண்டுள்ளனவாகக் கூறலாம். எனினும், திராவிட மொழியாராய்ச்சியாளர்கள் இதனை ஒப்புக்கொண்டதாகக் கூற முடியாது. திராவிட மொழிகள் பெரிதும் இந்து-ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவையே என்று திராவிட மொழியாராய்ச்சிப் பேரறிஞர் டாக்டர் போப் கருதுகிறர். தமிழ்க் கைச் சுவடிஎன்னும் தம் நூலின் முன்னுரையில் அவர் பின்வருமாறு எழுதியுள்ளார்.


1. Tamil Hand-Book.