பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/214

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள்

195

துதம், கோதம் என்ற இரு திருத்தமில்லா மொழிகள் நீலகிரியைச் சேர்ந்த பகுதிகளிற் பேசப்பட்டு வருகின்றன. இவை சொற்றொகுதிகள் என்று சொல்லுந் தரத்தனவே யன்றி மொழிகள் எனக் குறிப்பிடற் கேற்றவையாகா.


குறுக்கம் அல்லது ஒராவோன்[1] :

சோட்டா நாகபுரியிலுள்ள திராவிட மக்கள் பேசுவது ஒராவோன் என்று அழைக்கப்படும் குறுக்க மொழியே. அது சோட்டா நாகபுரியை யடுத்துள்ள மத்திய மண்டிலப் பகுதிகளிலும் பயின்றுவருகின்றது. தொன்மைசான்ற தமிழ்மொழியுடனும், பழைய கன்னடமொழியுடனும் அதற்குக் தொடர்பிருக்கிறதாகக் கூறலாம். இவ்விரண்டையுந் தவிர்ந்து, திராவிட மொழியினத்தைச் சார்ந்த வேறெம் மொழியுடனும் அதற்குத் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. அம்மொழி பேசும் மக்களே தாங்களும், மாலர் என்ற இனத்தாரும் கன்னட நாட்டிலிருந்து வந்து அங்குக் குடியேறியதாக இன்றுஞ் சொல்லிக்கொள்கின்றனர். மாலர்கள் பேசுவது மால்டோ என்ற மொழியாகும்.

மால்டோ :

ஒராவோனினத்தைச் சேர்ந்த இவர்கள், இக்காலை, கங்கை யாற்றின் கரையிலுள்ள இராஜமகாலருகில் அதன் வட பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். ஒராவோன், மால்டோ ஆகிய இரண்டு மொழிகட்குமே எழுத்து வடிவோ, இலக்கியமோ கிடையா.


  1. ஆழ்ந்து நோக்கின் ஒராவோன் அல்லது உராவோன் என்பது தமிழ்மொழிக்கு ஒரு பெயராய அரவம் என்பதன் திரிபேபோலும் , அரவம், உரவம், உரவன், உராவன் என்றின்னணம் கொள்க.