பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

கால் பந்தாட்டம்


ஆகவே, எட்டடி உயரத்திற்குள் இருபத்தி நான்கு அடி இடைவெளிக்குள் இருக்கின்ற இலக்குப் பரப்புக்குள் பந்தை அடிக்க ஒருவகை சாமர்த்தியம் நிச்சயம் தேவையே. அதற்கு மூன்று விதங்களில் பயிற்சி செய்வது நல்லது. நிற்க வைத்திருக்கும் நிலையான பந்தை உதைப்பது; பந்தை கால்களால் உருட்டிக் கொண்டு ஓடி வந்து பிறகு பந்தைக் குறியுடன் இலக்கை நோக்கி உதைப்பது; எதிரே வருகின்ற பந்தை, வலிமையுடன் குறிப்புடன் உதைப்பது.

மேற்கூறிய மூன்று முறைகளையும் தினந்தோறும் பழகி வந்தால், நினைத்த இடத்திற்குப் பந்தை அனுப்பும் திறமை வந்துவிடும். பிறகு, இலக்கினுள் பந்தை எவ்வாறு அடிப்பது என்பதை முன்கூறியுள்ள பகுதிகளில் கண்டு, தெளிவு பெற்று, ஆடிப் பழக வேண்டும். இதற்கும் நிறைந்த ஆர்வமும் இடைவிடாமுயற்சியும் வேண்டும்.

7. எதிர்க் குழுவினரை சமாளித்தல் அல்லது ஏமாற்றுதல் (Tackling)

எதிர்க்குழுவினர் வசம் பந்திருக்கும்போது, அவர்களிடமிருந்து விதிகளை மீறாதவாறு, பந்தைத் தங்கள் வசம் பெறுவது என்பது உண்மையிலேயே கற்றுக் கொள்ளவிருக்கும் ஓர் ஒப்பற்ற கலையாகும்.

தான் நினைத்த இடத்திற்குப் பந்தை வழங்கவும், தானே கொண்டு போகவும் தனி சாமர்த்தியமும் வேண்டும். தன்னைத்தடுக்க வருபவர்களை ஏமாற்றவும் சமாளிக்கவும் தெரிந்திருப்பதுடன், எதிர்ப்பவர்களின் நோக்கத்தை அறிந்து அவர்கள் முயற்சியை முறியடிக்கவும், திசை திருப்பவும் தெரிந்திருக்க வேண்டும்.