உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கால ஆராய்ச்சி அரிகேசரி.நல்லூரில் உள்ள சிவன் கோவில் இராஜசிம்மேசுவரம் எனப் பெயர் பெற்றிருந்தது என்று கல்வெட்டுக் கூறுகின்றது. எனவே, இராஜசிம்மன் என்ற பாண்டியனால் அது கட்டப்பட்டது என்பது தெளிவு. பாண்டியர் பட்டியலில் இராஜசிம்மன் என்ற பெயருடன் இருவர் காண் கின்றனர். முதலாம் இராஜசிம்மன் காலம் கி.பி. 740-765. இரண்டாம் இராஜசிம்மன் காலம் கி.பி. 900-925. ஊர்ப்பெயருக்குக் காரணமான அரிகேசரி என்பவன் ஞானசம்பந்தரால் சைவனாக்கப்பட்ட நின்றசீர் நெடுமாறன். அவன் பெயரனே முதலாம் இராஜசிம்மன். தன் பாட்டனான நெடுமாறனும் பாட்டியான மங்கையர்க்கரசியும் சிறந்த சிவபக்தர்கள் ஆதலால், அவர் வழியில் வந்த முதலாம் இராஜசிம்மன் தன் பாட்டன் பெயர் கொண்ட ஊரில் ஒரு சிவன் கோவிலைக் கட்டியிருத்தல் இயல்பே. இரண்டாம் இராஜசிம்மன் நெடுமாறனுக்கு ஏழு தலைமுறை கழித்து வந்தவன். முதற்பாண்டியப் பேரரசின் கடைசி அரசன். மேலும் அவன் ஓயாத போர்களில் ஈடுபட்டுப் பராந்தக சோழனிடம் தோற்று இலங்கைக்கு ஓடியவன். மேலும் மணிவாசகரால் குறிக்கப்பட்ட வரகுண பாண்டியன் காலத்துக்குப் (இரண்டு வரகுணர் காலத்துக்கும் கி.பி. 792-835, கி.பி. 862-880) பிற்பட்டவன் ஆகின்றான். இவ்விரு காரணங்களாலும் இரண்டாம் இராஜசிம்மன் அரிகேசரி நல்லூரில் மணிவாசகரால் சுட்டப்பட்ட சிவன் கோவிலைக் கட்டியிருத்தல் இயலாது. எனவே, மணிவாசகரால் சுட்டப்பட்ட சிவன் கோவிலைக் கட்டியவன் முதல் இராஜசிம்மனாகத்தான் இருத்தல் வேண்டும் என்பது எளிதில் புலனாகும்.) - அரிகேசரி.நல்லூர் என்ற ஊர்ப் பெயர் ஏற்பட்ட காலம் கி.பி. 640-670. அப்பிரமதேய ஊரில் இராஜசிம்மேசுரம் கட்டப்பட்ட காலம் கி.பி. 710-765. அரிகேசரி.நல்லூர் என்ற பெயர் நீண்டகால வழக்கிற்குப் பின்பே 'அரிகேசரி என்று சுருங்குதல் இயல்பு. அங்ங்னம் சுருங்கி வழங்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தமையாற்றான் மணிவாசகர் அரிகேசரி.நல்லூரை அரிகேசரி என வழங்கினராதல் வேண்டும். மேலும், அவர் தமது திருக்கோவையாரில் இரண்டு இடங்களில்" பாண்டியன் வரகுணனை நிகழ்காலத்தில் வைத்துப் பாடியிருத்தலால், வரகுணன் காலத்தவராகக் கருத இடமுண்டு. பாண்டியர் பட்டியலில் வரும் வரகுணன் இருவரில் இரண்டாம் வரகுணன் காலத்தவராகவே மணிவாசகர் இருந்தனராதல் வேண்டும் என்று பலர் கருதுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/131&oldid=793166" இலிருந்து மீள்விக்கப்பட்டது