பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 கால ஆராய்ச்சி தில்லையின் சிறப்பையும், தில்லைவாழ் அந்தணர் சிறப்பையும் உளங்கொண்டே சுந்தரர் தில்லைவாழ் அந்தணரை முதலில் வைத்துத் தொகை பாடத் தொடங்கினர். பின்வந்த எல்லா அடிகளிலும், பாக்களிலும் தனி அடியார்களே சுட்டப்பட்டுள்ளனர். ஏழாம் செய்யுளிலும் தனி அடியார்களே சுட்டப்படும் செய்யுளில் திடீரென்று தொகை அடியாராய சங்கப்புலவரைக் குறிக்கப் "பொய்யடிமை இல்லாத புலவர் என்னும் தொடரைக் குறிக்க வேண்டிய காரணம் யாது? இதற்குரிய காரணம் எவராலும் இதுகாறும் விளக்கப்படவில்லை. எனவே, அத்தொடர் தனி அடியாரைக் குறிப்பதேயன்றித் தொகை அடியாரைக் குறிப்பது அன்று என்று கோடலே, வைப்பு முறையை நோக்கத் தெளிவாகின்றது. (3) நம்பி தமது அந்தாதியின் 87ஆம் செய்யுளில், சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையில், 63 தனி அடியாரையும், 9 தொகை அடியாரையும் குறித்திருப்பதாகக் கூறியுள்ளார். பாடிய சுந்தரரை நீக்கியும், பொய்யடிமை இல்லாத புலவர் என்பது சங்கப்புலவரைக் குறிப்பதென்று கொண்டும் கணக்கிட்டால், திருத் தொண்டத் தொகையில் வரும் தனி அடியார் எண்ணிக்கை அறுபத்திரண்டே ஆகின்றது. பொய்யடிமை இல்லாத புலவர் ஒருவரே என்று கொண்டு கணக்கிடின், தனி அடியார் எண்ணிக்கை 63 ஆகின்றது. தொகை அடியார் தொகை எட்டு ஆகின்றது. சுந்தரரால் பாடப்பட்டவர் அறுபத்துமூவரே தவிர, சுந்தரரையும் சேர்த்து நாயன்மார் அறுபத்துமூவரல்லர் என்பது இங்கு அறியத்தகும். நம்பி திருவிளையாடற் புராணம், மணிவாசகரை "மெய்யடியான்' (பொய்யடிமை இல்லாதவன்), "பாடல் மாமுனிவன் என்று பாராட்டியிருத்தல், பொய்யடிமையில்லாத புலவர் என்று சுந்தரர் குறித்தது மாணிக்கவாசகரையே என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துதல் காண்க. இதுகாறும் கூறப்பெற்ற சான்றுகளால், "பொய்யடிமை இல்லாத புலவர் என்று சுந்தரர், மணிவாசகரையே குறித்தனராதல் வேண்டும் என்று கருதுதல் பொருத்தமாகும். முடிவுரை இதுகாறும் கூறப்பெற்ற அறிஞர் பலருடைய ஆராய்ச்சி முடிவுகளிலிருந்து மாணிக்கவாசகர் மூவர்க்கும் பிற்பட்டவர் என்பது தெளிவாகின்றது. ஆனால் இறுதியில் கூறப்பெற்ற திரு.கே.ஜி. சேஷ ஐயர் அவர்களது ஆராய்ச்சியின்படி, மாணிக்கவாசகர் சுந்தரரது திருத்தொண்டத் தொகையில் இடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/139&oldid=793183" இலிருந்து மீள்விக்கப்பட்டது