பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் காலம் 139 உமாபதி சிவமே இச்செய்திகளையே தவறாகக் கூறும் சேக்கிழார் புராண வரலாற்றையும் பாடினார் என்பது எங்ங்ணம் பொருந்தும்? 'திருத்தொண்டர் புராண வரலாறும் திருமுறை கண்ட புராணமும் உமாபதி சிவம் பாடினார் எனக் கூறுதல் மரபு என்று சமாஜப் பதிப்புக் குறித்துள்ளது." இவற்றை உமாபதி சிவம் பாடினார் என்று கூறும் தனிப்பாட்டுச் சில பிரதிகளில் இல்லை என்று திரு.வி. கலியாணசுந்தர முதலியார் பதிப்புக் குறித்துள்ளது." இவற்றை நோக்க, உமாபதி சிவாசாரியார் திருத்தொண்டர் புராண சாரம் முதலிய மூன்று நூல்களைச் செய்தவராகலாம் எனக் கோடல் தவறாகாது. உமாபதி சிவனார் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்." ஆயின், திருத்தொண்டர் புராண வரலாறும், திருமுறைகண்ட புராணமும் செய்த ஆசிரியர் இன்னவர் என்பதோ, அவர் காலம் இன்னது என்பதோ திட்டமாகக் கூறுவதற்கில்லை. ஆயினும் அவற்றுள் இராசராசன், அநபாயன் என்ற அரசர் பெயர்களும் கல்வெட்டுக்களோடு ஒன்றுபடும் சேக்கிழார் பற்றிய குறிப்புக்கள் சிலவும் தவறின்றிக் கூறப்படலால், அவை, சேக்கிழார்க்குப் பிற்பட்ட ஒன்றிரண்டு நூற்றாண்டுகளில் செய்யப்பட்டன ஆகலாம் எனக் கோடல் தவறாகாது. மேலும், புகழ் பெற்ற உமாபதி சிவனார் தவறின்றிப் பாடிய திருத்தொண்டர் புராண சாரத்திற்குப் பிறகு, பல தவறுகள் கொண்ட திருத்தொண்டர் புராண வரலாறு பெயர் தெரியாத ஒருவரால் பாடப்பட்டது என்பது பொருத்தமுடையதன்று. ஆதலால், திருத்தொண்டர் புராண வரலாறு, மிகுந்த சைவப்பற்றும், சமணசமய வெறுப்பும் கொண்ட ஒருவரால் உமாபதி சிவாசாரியர்க்கு முன்பே பாடப்பெற்றது; அவராலேயே திருமுறைகண்ட புராணமும் பாடப்பெற்றது எனக் கோடல் பொருத்தமாகும். எனவே, இப்பெயர் தெரியாத ஆசிரியர் கி.பி. 13ஆம் நூற்றாண்டினர் எனக் கொள்ளலாம். இங்ங்னம் கொள்ளின், சிறந்த புலவரும் சைவ சித்தாந்த ஆசிரியருமாகிய உமாபதி சிவனார்க்கு நிறைவு உண்டாகுமே அன்றிக் குறைவு உண்டாகாமை காண்க. உமாபதி சிவத்தின் மூன்று சிறு நூல்களையும் அவற்றின் தொடர்பான சேக்கிழார் புராண வரலாற்றையும் திருமுறைகண்ட புராணத்தையும் கண்ட பிற்காலத்தார், பின்னவற்றையும் உமாபதி சிவமே பாடினார் எனக் கொண்டிருத்தல் இயல்பே. பொருந்தும் செய்திகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/148&oldid=793205" இலிருந்து மீள்விக்கப்பட்டது