பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறநானூற்றின் காலம் 1 என்றும் பட்டயங்களில் கூறிப் பெருமைப் படுத்திக் கொண்டனர். அந்த நாட்டைச் சூழிய (சோழ நாடு) என்று 7 ஆம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கு என்ற சீனவழிப்போக்கன் குறித்துள்ளான். இவர்கள் வழிவந்த தெலுங்குச் சோழர் (சோடர் பின் நூற்றாண்டுகளிற் சோழப் பேரரசர்க்கடங்கிக் குண்டுர், நெல்லூர், வடஆர்க்காடு, செங்கற்பட்டு, கடப்பை மாவட்டங்களை ஆண்டுவந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. விசயநகர வேந்தர்க்கு அடங்கிய சிற்றரசர் சிலரும் இச்சோழர் மரபினரேயாவர். இவர் அனைவரும் தம்மைக் கரிகாலனின் மரபினர் என்று கூறிக் கொண்டதை நோக்க, கரிகாலன் மிகச் சிறந்த போர்வீரன் - பலநாடுகளை உண்டாக்கியவன் என்பது தெளிவாகிறதன்றோ? கரிகாலன் காவிரியின் கரைகளை உயர்த்தியவன் என்று தெலுங்குச் சோழர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் பாடப்பெற்ற கலிங்கத்துப் பரணியும் (197) இச்செய்தியைக் குறித்துள்ளது. சோழன் ஒருவன் பன்னிராயிரம் சிங்களவரைச் சிறைசெய்து சோணாடு கொண்டு சென்று காவிரிக்குக் கரையிடுவித்தான் என்று இலங்கை வரலாறு கூறுகின்றது. பராந்தகன் முதலிய சோழப் பேரரசர் காலக் கல்வெட்டுக்களில் காவிரியின் கரை களிகாலக் கரை என்று குறிக்கப்பட்டுள்ளது. கரிகாலனே இமயம் வரையில் சென்று மீண்டதாகச் சிலப்பதிகாரம் செப்புகிறது. அவனது காலத்தில் கடல் வாணிகம் சிறந்திருந்தது என்பது பட்டினப்பாலையால் தெரிகிறது. எனவே, ப்டை வலிமை மிகுந்த அவனே இலங்கைமீது படையெடுத்திருக்கலாம். அங்ங்னமாயின், (அவன் படையெடுத்த காலம் கி. பி. 111-114 என்று இலங்கை வரலாறு கூறுவதால்) கரிகாலன் காலம் கி. பி. முதல் நூற்றாண்டின் இறுதியும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியுமாக (கி. பி. 115 வரையில்) இருக்கலாம். நெடுமுடிக்கிள்ளி (கி. பி. 115 - 136) இவன் மணிமேகலை காலத்தவன். மணிமேகலை செய்த சாத்தனார் செங்குட்டுவன் காலத்தவர். செங்குட்டுவன் கயவாகுவின் (கி.பி. 114-136) காலத்தவன். எனவே, இந்நெடுமுடிக்கிள்ளியும் அக்காலத்தவனே யாவன். அக்காலத்தில்தான் பாண்டியநாட்டை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆண்டுவந்தான். அவனுக்குப் பின்பு மதுரையின் ஒருபகுதி அழிந்தது. இந்நெடுமுடிக்கிள்ளியோடு பூம்புகாரின் ஒரு பகுதி அழிவுற்றது என்று மணிமேகலை கூறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/19&oldid=793275" இலிருந்து மீள்விக்கப்பட்டது