பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்துப்பாட்டின் காலம் 63 திருமுருகாற்றுப்படையின் நடை சங்கச் செய்யுள்களின் நடையை ஏறத்தாழ ஒத்துள்ளது; சங்க காலக் குறிஞ்சி நில மக்களது முருக வழிபாட்டை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது: கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய திருமுறைப் பாடல்களிற் குறிப்பிடப்பட்ட திரு என்னும் அடைமொழியைத் திருமுருகாற்றுப் படையில் கூறப்பட்டுள்ள தலங்கள் பெறவில்லை. முருக வணக்கம் சங்க காலத்திற் சிறப்புற்றிருந்தது. பரிபாடலில் முருகனைப் பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கி.பி.6 ஆம் நூற்றாண்டு முதல் உண்டான நூற்றாண்டுகளில் சிவ வணக்கமே சிறப்புறலாயிற்று என்பதற்குப் பன்னிரு திருமுறைகளே ஏற்ற சான்றாகும். இவை அனைத்தையும் நோக்க, திருமுருகாற்றுப்படை சங்ககாலத்திற்குப் பின்பும் (கி.பி. 300க்குப் பின்பு) அப்பர் சம்பந்தர்க்கு முன்பும் (கி.பி. 500க்கு முன்பு) பாடப்பட்டிருக்கலாம் என்று கூறுதல் பொருத்தமாகும்." சங்ககால நூல்களுள் தொல்காப்பியத்திலும் மணிமேகலையிலும் கடவுள் வாழ்த்து இல்லை. சிலப்பதிகாரத்தில் திங்கள், ஞாயிறு, மழை என்னும் மூன்றையும் போற்றும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடம் பெற்றுள்ளது. அஃது இடைச் செருகல் என்று கூறுவாரும் உளர். தொகை நூல்கள் பின் தொகுக்கப்பட்டவையாதலின் கடவுள் வாழ்த்துச் சேர்க்கப்பட்டது. பின்னர்த் தோன்றிய நூல்களுக்கும் கடவுள் வாழ்த்துப் பாடுதல் புலவர் மரபாயிற்று. பத்துப்பாட்டுள் 9 பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில், பின்தோன்றிய திருமுருகாற்றுப்படையை அது கடவுள் பற்றிய பாடலாதலாலும் அதன் நடை சங்க கால நடையை ஒத்திருத்தலாலும், முன்வைத்துப் பத்துப்பாட்டு என நூலுக்குப் பெயரிடப்பட்டது, எனக் கோடல் பொருத்தமாகும். குறிப்புகள் 1. எஸ். வையாபுரிப் பிள்ளை, இலக்கிய தீபம், பக். 29. 2. கலைக்களஞ்சியம், தொகுதி 2, பக். 141. 3. பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்கள் இளம்பூரணர் உரையை ஏடுகளிற் கண்டு, இளம்பூரணர் 'பத்துப் பாட்டு என்று கூறவில்லை என்று குறித்துள்ளார்கள். ஆயின் அச்சிடப் பட்ட நூல்களில் செய்யுளியல் நூற்பா 150 இன் உரையில் பத்துப் பாட்டு என்பது காணப்படுகிறது. இவருக்குப் பின்வந்த பேராசிரியர் 'பாட்டு என்றே பல இடங்களில் குறித்துள்ளார். தமக்கு முற்பட்ட இளம்பூரணர் பத்துப் பாட்டு என்று குறித்திருப்பாராயின், பின்வந்த பேராசிரியர் அதனையே குறித்திருத்தல் இயற்கையன்றே? எனவே, இளம்பூரணர் பத்துப் பாட்டு என்று குறிக்கவில்லை என்பதே உண்மையாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/70&oldid=793392" இலிருந்து மீள்விக்கப்பட்டது