பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 巴$fTQ) ஆராய்ச்சி பேராசிரியர் கூறும் தடைகள் சிலப்பதிகாரம் கி.பி. 500க்குப் பிற்பட்டதாகும் என்று கூறிய பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் கீழ்வரும் காரணங்களைக் கூறியுள்ளார்: 1. இளங்கோவடிகள் செங்குட்டுவன் தம்பி என்று கூறப்படுகிறது. அதற்கு மணிமேகலையிலோ பதிற்றுப்பத்திலோ சான்றில்லை. - 2. பத்தினி விழாவின்போது இலங்கைக் கயவாகு வேந்தன் சேர நாடு வந்திருந்தான் என்பதற்குச் சிலப்பதிகாரம் தவிர மணிமேகலை முதலிய வேறு நூல்களில் சான்றில்லை; இலங்கை வரலாறு கூறும் மகாவம்சத்திலும் கூறப்படவில்லை; கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற இராச வழி என்னும் நூலில்தான் கூறப்பட்டுள்ளது. 3. இளங்கோவடிகள் செங்குட்டுவன் தம்பியாயிருப்பின் அவர் காலம் சங்க காலமாகும். அவர் பாடிய பாடல் ஒன்றேனும் தொகை நூல்களில் இல்லை. அவர் மணிமேகலை பாடிய சாத்தனார் தவிர வேறு சங்கப் புலவர்களை அறிந்தவர் என்பதற்குச் சான்றில்லை. 4. மணிமேகலை ஆசிரியரான சாத்தனார் சீத்தலைச் சாத்தனாரல்லர். அவர் அரசு கட்டில் துஞ்சிய நெடுஞ்செழியன் காலத்தவர். இந் நெடுஞ்செழியன்மீது ஒரு சங்கப் புலவரும் பாடவில்லை. எனவே, இந் நெடுஞ்செழியனை உண்மை அரசன் என்று கொள்வதற்கில்லை. 5. பத்தினி வணக்கம் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதே தவிரப் பிற தொகை நூல்களில் கூறப்படவில்லை. 6. கண்ணகியால் குறிக்கப்பட்ட கற்புடை மகளிருள் ஒருத்தி கரிகாலன் மகள் ஆதிமந்தி என்பதற்குச் சான்றில்லை. ஏனைய பத்தினிப்பெண்களும் பிற தொகை நூல்களில் குறிக்கப்படவில்லை. 7. சிலப்பதிகாரத்தில் வேங்கடமலையில் திருமால் நின்ற கோலத்தில் இருப்பதாகச் சிலப்பதிகாரம் செப்புகிறது. ஆயின், தொகை நூல்களில் வேங்கடமலை சமயத்துறையில் சிறந்ததாகக் கூறப்படவில்லை. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கூறப்பட்டுள்ள சமய வளர்ச்சியைத் தொகை நூல்களில் காணுமாறு இல்லை. ஐந்தெழுத்தும் எட்டெழுத்தும் தொகை நூல்களில் கூறப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/75&oldid=793403" இலிருந்து மீள்விக்கப்பட்டது