பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கால ஆராய்ச்சி இராச வழியில் அச்செய்தி குறிக்கப்பட்டுள்ளது. கயவாகு வந்தமை சிலப்பதிகாரத்தில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. "அதுகேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாட்பலி பீடிகைக் கோட்டம் முந்துறுத்து, ஆங்கு அரந்தை கெடுத்து வரந்தரும் இவள் என ஆடித்திங்கள் அகவயின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப மழை வீற்றிருந்து வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்று", என்று இளங்கோவடிகள் உரைபெறு கட்டுரையில் உரைத்துள்ளார். கயவாகுவின் தலைநகர் அநுராதபுரம். அவன் அதனில் ஆடி மாதத்தில் (சூலை - ஆகஸ்டு) பத்தினி விழாக் கொண்டாடியிருத்தல் வேண்டும்." இலங்கையில் கயவாகு வேந்தன் கட்டிய கண்ணகி கோவிலிலிருந்து அவனது உடைந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. கண்ணகியின் சிலை இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்டு இங்கிலாந்து பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் கண்ணகிக்குக் கோவிலோ விழாக்களோ இன்று இல்லை. ஆயின், இலங்கைத் தமிழரும் சிங்களவரும் ஆண்டுதோறும் பத்தினிக்கு இன்றும் விழா எடுக்கின்றனர். இச்செய்திகள் அனைத்தும் கயவாகுவுக்கும் பத்தினி வணக்கத்திற்குமுள்ள தொடர்பை ஐயமற விளக்குகின்றன அல்லவா? 3. இளங்கோவின் தனிப்பாடல் எதுவும் தொகை நூல்களில் இல்லை என்பது உண்மையே. இதனால் அவர் சங்ககாலத்திற்குப் பிற்பட்டவர் என்பது எங்ங்னம் பொருந்தும்? காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் முல்லைப்பாட்டைப் பாடியவர். அவர் எட்டுத் தொகை நூல்களில் ஒரு பாடலையேனும் பாடினார் என்பதற்குச் சான்றில்லை. இது கொண்டு அவர் காலம் பிற்பட்டதென்று கூறலாமா? அடிகள் சேர நாட்டுச் சமணத் துறவியார், அவருடன் நெருங்கிப் பழகியவர் சாத்தனார் ஒருவரே போலும் அதனாற்றான் சாத்தனார் முன்னிலையில் சிலப்பதிகாரம் அரங்கேற்றப் பெற்றது; அடிகள் முன்னிலையில் மணிமேகலை அரங்கேற்றப் பெற்றது. 4. மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் நெடுஞ்செழியன் காலத்தவர் என்பது உண்மையே. அவர் பாடிய பாடல் எதுவும் தொகை நூல்களில் இல்லை. எனினும், அது கொண்டு அவர் காலத்தால் பிற்பட்டவர் என்பது எங்ங்ணம் பொருந்தும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/77&oldid=793407" இலிருந்து மீள்விக்கப்பட்டது