கலைஞரின் சட்டமன்ற உரைகள்
273
இன்றைக்கு ஆளுங்கட்சியாக இருக்கிற கட்சியின் உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டார்கள். எதிர்க்கட்சியிலே இன்றைக்கு இருக்கிற எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்துள்ள யார், யார் கொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரத்தை எல்லாம், கவர்னர் உரையிலும், நிதி நிலை அறிக்கையிலும், இன்றைக்கும் கூட எடுத்துச் சொன்னார்கள். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொலை செய்யப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் - பொள்ளாச்சி லத்தீப் என்ற கழகத் தோழர் கொலை செய்யப்பட்டார். ஆனால் அதிலே குற்றம் சாட்டப்பட்ட அண்ணா தி.மு.க. தோழர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் கொலை கொலைதான். பொள்ளாச்சி லத்தீப் இறந்தது உண்மை, ஏனென்றால் அவன் இறந்து விட்டான் என்பது எல்லோருக்கும் தெரியும். கொலை செய்யப்பட்டான் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், கழக அரசு இதிலே தலையிட்டிருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டிருக்கமாட்டார்கள். இதிலே தலையிடவில்லை, திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை உதாரணத்திற்காக சொல்லுகிறேன்.
பிரதாப் சந்திரன், கழகத் தோழன், அவனை கொலை செய்த வழக்குகளில் நான்கு பேர்கள் விடுதலை செய்யப் பட்டார்கள். இரண்டு பேர்கள் தண்டிக்கப்பட்டார்கள். சிவகெங்கை குமாரப்பட்டி முத்து, இங்கே கூட கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள், சொன்னார்கள் அவர் கழக உறுப்பினரே இல்லை என்று. இன்றைய முதல் அமைச்சர், அன்றைய கழகத்தினுடைய பொருளாளர், நண்பர் மாதவனுடன் சென்று, சிவகெங்கையில், அந்த குமாரப்பட்டிக்குச் சென்று முத்துவினுடைய வீட்டிலே துக்கம் விசாரித்துவிட்டு ஆறுதல் கூறிவிட்டு வந்தார்கள்.
30-7-1972-லே, கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்கிலே விடுதலை செய்யப்பட்டார்கள். கோவை மாவட்டத்திலே குரிச்சியைச் சேர்ந்த ராஜா என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கிலே எதிரிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
10 - க.ச.உ. (கா.து)