கலைஞரின் சட்டமன்ற உரைகள்
37
விட்டு, கருப்புச் சட்டைப் போட்டுக்கொண்டு போடா" என்று கடற்கரைக் கூட்டத்தில் பேசப்பட்டது என்றால், யார் போலீஸாரை மிரட்டுகிறார், எந்த அளவுக்கு அவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி மிரட்டப்படுகின்ற காரணத்தினால்தான், என்னுடைய கட்சியைச் சார்ந்த உறுப்பினர் திரு. அரங்கண்ணல் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள், தேர்தல் நேரத்தில் சென்னை நகரில் நடந்த அல்லோலங்களைப்பற்றி, தேர்தலுக்கு முதல் நாள் என்னென்ன நடந்தது, யார் யார் எந்தெந்த வகையில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை எல்லாம் எடுத்துச் சொன்னார்கள். கைது செய்யப்பட்டவர்கள் ஏதோ ரௌடி பட்டியலில் சேர்ந்தவர்கள் என்று சொல்லி பூசி மழுப்பி விடுவதால் உண்மைக்கு மதிப்பும் கண்ணியமும் கொடுத்ததாகி விடாது. துளசிங்கம் என்ற கௌன்சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அவரும் ரௌடி லிஸ்டில் இருப்பவர்கள் என்று சொல்லி பூசி மழுப்பி விடுவது எந்த அளவுக்கு நியாயம் என்பதை அமைச்சர் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேர்தல் காலத்தில் நடைபெற்ற சொற்பொழிவின் காரணமாக என்ன நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இதைப்பற்றி நான் இந்த மன்றத்திலேயே குறிப்பிட்டு சொன்னேன். வெளியில் கூட்டங்களில் ஆளும் கட்சியினரின் சார்பாக பேசிய பேச்செல்லாம் எங்கே கொண்டுபோய் விடுகின்றன என்பதைப் பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னேன். ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக வெளியில் நடந்த பேச்சுக்களின் நிலைமை எங்கே போய் முடிந்தது என்பதை நாம் நன்றாக அறிவோம். ராஜாஜி வீட்டில் கொலை வெறியன் நுழைந்தான் என்ற நிலை அப்படிப்பட்ட வெறியுணர்ச்சியை தூண்டிவிடுகின்ற அளவுக்கு பொதுக்கூட்டங்களில் 'கொல்லுங்கள், குத்துங்கள்' என்று பேசக் கூடிய அளவுக்குப் பேச்சுக்கள் எல்லாம் அன்றையதினம் அனுமதிக்கப்பட்டது. ஏதோ இன்றைக்கு அந்தக் கொலை வெறியன் பைத்தியக்காரன் என்று கூறிவிடலாம். உண்மையிலேயே பைத்தியக்காரன்தான் வெறியுணர்ச்சிக்கு ஆளாகக்கூடும். பைத்தியக்காரன் அல்லாமல் அறிவாளியா வெறியுணர்ச்சிக்கு ஆளாவான்? பைத்தியக்காரன் அல்லாமல் புத்திசாலியா வெறியுணர்ச்சிக்கு ஆளாவான்? வெறியுணர்ச்சிக்கு ஆளாகின்றவன்