கலைஞரின் சட்டமன்ற உரைகள்
623
நம்முடைய எதிர்க்கட்சியினுடைய துணைத் தலைவருடைய புள்ளி விவரங்கள் ஒரு சிறிது வேறுபடுகின்றன என்பதற்கு ஒரேயொரு சான்றினை மாத்திரம் இங்கே தர விரும்புகின்றேன். சாதிக் கலவரத்தில் 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையில் அ.தி.மு.க. ஆட்சியில், அதைப்போல, 1996 முதல் 2001 வரையில் தி.மு.க. ஆட்சியில் என்று அவர் வகுத்துக் கொண்டு, எத்தனை நிகழ்வுகள் என்று சொன்னார். அதிலே, ஒரு திருத்தத்தோடு இந்த புள்ளிவிவரத்தை அவருக்கு நான் பிழை திருத்திச் சொல்ல விரும்புகின்றேன். 1991-96 அ.தி.மு.க. ஆட்சியில் சாதிக் கலவர நிகழ்வுகள் 337. 1996-2001, தி.மு.க. ஆட்சியில் 269. 337-ஐவிட 269 குறைவு என்று நான் சொல்லத் தேவையில்லை. (மேசையைத் தட்டும் ஒலி) ஒரு பெரிய வித்தியாசம் இல்லை என்பதற்காக இதைச் சொல்கின்றேன்.
அந்தக் கலவரத்திலே இறந்தவர்கள், 1991-1996 இந்தக் காலகட்டத்தில் 189 பேர் அ.தி.மு.க. ஆட்சியில்; தி.மு.க. ஆட்சியில் 182 பேர். காயமடைந்தோர், அ.தி.மு.க. ஆட்சியில், 1991-1996-ல், 2,048 பேர்; தி.மு.க. ஆட்சியில் 964 பேர். இந்தத் தொகை அதிகமாக காயமடைந்தவர்களுடைய பட்டியலிலே காட்ட முடிகின்றது. ஒருவேளை இதை நம்முடைய துணைத் தலைவர் அவர்கள் படித்திருப்பாரேயானால், அவருடைய நண்பர்கள், மேஜை உடைகின்ற அளவிற்குக் கைதட்டி, '2,048 பேர் அதிகம், நம்முடைய காலத்திலேதான் காயமடைந்திருக்கிறார்கள்' என்று பாராட்டி மகிழ்ந்திருக்கக் கூடும். (மேசையைத் தட்டும் ஒலி). காவலர்களை, அம்மா ஆட்சியிலேதான், உன்னதமான இடத்திற்கு, உயர்ந்த இடத்திற்கு, சிறப்பான இடத்திற்கு, இட்டுச் சென்றதைப் போல, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களுடைய பேச்சு அமைந்திருந்தது. அது அப்படித்தான் அமையும்; அமைய வேண்டும்; அந்த வகையிலே, அந்தப் பேச்சு அமைந்திருந்தது. இன்று காலையிலேயிருந்து எதிர்க்கட்சி வரிசையிலே உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நீண்டநேரம் தங்களுடைய கருத்துக்களை இந்த மானியத்திலே எடுத்துக் கூறியிருக்கின்றார்கள்.
நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், அந்தக் கட்சியினுடைய சட்டமன்றத் தலைவர் நண்பர் கோ. க. மணி அவர்கள் உரையாற்றும் பொழுது, உதவிக்கு இன்னொரு