132
காவிரிப் பிரச்சினை மீது
அப்போது முன்னாள் முதலமைச்சராக இருந்த பெரியவர்கள். பெருந்தலைவர் காமராஜர் அவர்களிடத்திலும், அப்போது முதலமைச்சராக இல்லாமல் ஓய்வு பெற்றிருந்தாலும் கூட, பெரியவர் பக்தவத்சலம் அவர்களிடத்திலும் சென்று ஒவ்வொரு முறையும் கலந்துபேசி அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தையும் கூட்டி அவர்களுடைய கருத்துக்களையும் கேட்டேன். அதைப்போல சி.எஸ். அவர்களிடம் தனிப்பட்ட முறையில் சென்று அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு விவாதித்திருக்கிறேன். டெல்லிக்குச் சென்றபோதெல்லாம் திரு.கே.எல்.ராவ் போன்றவர்களுடன் சந்தித்து, அங்கே என்ன பேசுவது என்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும் பெரியவர் பக்தவத்சலம், பெருந்தலைவர் காமராஜர், திரு.சி.எஸ். அவர்களிடத்தில் எல்லாம் கலந்துகொண்டு செய்வதும் வழக்கம். அதைப்போல ஆர். வி. அவர்களிடத்திலும் கலந்து கொள்வது வழக்கம். அந்த அளவுக்கு இந்த விஷயத்தில் அதிகத் தொடர்பு கொண்டவர்களிடத்திலேயெல்லாம் எந்த அளவுக்குத் தொடர்பு
காள்ள வேண்டுமோ அந்த அளவுக்குக் கலந்து பேசியிருக்கிறேன். இப்போது எனக்கு ஏற்பட்ட புது அனுபவம், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு வருகின்ற பிரதிநிதிகள் தங்களுடைய கட்சித் தலைமையோடு தொடர்பு கொண்டிருப்பார்கள் என்று நான் எண்ணினேன். அந்தத்தொடர்பு சில பிரதிநிதிகளுக்கு இல்லை என்கிற உண்மை இப்போது எனக்குப் புரிகிறது. இந்த உண்மையைத்தான் நான் இப்போது தெரிந்து கொண்டிருக்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மிக அவசரமாக இந்தத் தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய அவசியம் வந்ததற்கான காரணத்தை நான் விளக்க வேண்டியவனாக இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்தில் காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையை உடனடியாக மத்திய அரசு நடுவர் தீர்ப்புக்கு விட வேண்டும் என்று தஞ்சை மாவட்ட விவசாயிகள் தொடர்ந்துள்ள வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, இன்றைய தினம் அந்த வழக்கில் பேச்சுவார்த்தையினுடைய முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவலாக இருக்கிறார்.