உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

137

வந்து விட்டார்கள். இடைக் காலத்திலே, கடந்த காலத்திலே, நாங்கள் மின்சாரம் தருகிறோம்; பரிவர்த்தனையாக நீங்கள் தண்ணீர் தாருங்கள் என்று கேட்கின்ற அளவுக்கு நம்முடைய உரிமைகள் கூட விட்டு கொடுக்கப்படுகின்ற சூழ்நிலையில் தண்ணீரைப் பெற வேண்டிய அவதிக்கு இந்த மாநிலம் ஆளாகி இருக்கின்றது. படிப்படியாக நமக்கு வர வேண்டிய தண்ணீர் குறைக்கப்பட்டு, இன்னும் ஒரு ஐந்து, ஆறு ஆண்டுக் காலம் போனால் இதை விடக் குறைவாகத்தான் கர்நாடகம் நமக்குத் தண்ணீர் தரும் என்ற ஒரு கொடுமையான நிலை ஏற்படக் கூடும். இப்போதே கூட அவர்கள் வாதாடுகிற நேரத்திலே பேச்சுவார்த்தையில் 20 ஆண்டுக் கால சராசரி கணக்கை எடுக்காதே; கடந்த 5 ஆண்டுக் காலத்திலே எவ்வளவு தண்ணீர் தந்து இருக்கிறோம்; அந்தக் கணக்கை-சராசரியாக எடு என்று சொன்னார்கள். நான் கூட வேடிக்கையாக சொன்னேன், வேதனையோடு சொன்னேன், “கடந்த 5 ஆண்டு காலக் கணக்கை வைத்து சராசரி எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் இன்னும் ஒரு ஐந்து ஆண்டுக் காலம் இந்தப் பேச்சுவார்த்தையை நீட்டித்து, அப்போது ஐந்து ஆண்டு காலத்துச் சராசரிக் கணக்கு எடுத்தால், சராசரி பார்க்கத் தண்ணீரே இருக்காது; அந்த அளவுக்கு நீங்கள் கடந்த காலத்திலே தமிழகத்தை ஏமாற்றத்திற்கு ஆளாக்கி இருக்கின்றீர்கள்" என்று நான் குறிப்பிட்டுத்தான், மேலும் ஆய்வுகள் தேவையில்லை ; மேலும் புள்ளி விவரங்கள், சேகரிக்கத் தேவையில்லை; இருக்கின்ற புள்ளி விவரங்கள், ஏற்கெனவே செய்யப்பட்ட ஆய்வு-இந்த அடிப்படையிலே பேசினால் போதும் என்று சொன்ன பிறகு தான், அதை ஏற்றுக்கொண்டு அவர் சென்னைக்கு வந்தார், பேச்சு வார்த்தை நடத்த. பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து விட்டது என்பதை நாம் தெளிவாக அவருக்கும் தெரிவித்திருக்கிறோம் நாட்டுக்கும் தெரிவித்திருக்கிறோம் மத்திய அரசுக்கும் தெரிவித்திருக்கிறோம் பிரதமருக்கும் உடனடியாக அன்றைக்கே கடிதம் எழுதியிருக்கிறேன். நீர்ப்பாசனத் துறை அமைச்சருக்கும் அன்றைக்கே கடிதம் எழுதியிருக்கிறேன். உச்ச நீதிமன்றத்திற்கும் நம்முடைய வழக்கறிஞர் மூலமாக இந்தச் செய்தி நேற்றைய தினம் தரப்பட்டிருக்கிறது. அந்தச் செய்தியினுடைய பிரதிகள் மத்திய அமைச்சர்களுக்கும், பிரதமருக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன.