உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

39

தேர்தலை 6 மாதங்களுக்கு முன் கூட்டி செய்திருக்க வேண்டுமென்று சொன்னேனேயல்லாமல் வேறு அல்ல.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காலையில் இந்த மாமன்றத்தின் முன்னால் நான் முன் மொழிந்த தீர்மானத்தை வழி மொழிந்து அனைத்து கட்சிகளுடைய தலைவர்களும் தங்களுடைய மனப்பூர்வமான ஆதரவை தமிழ் நாட்டு மக்களின் சார்பாகத் தந்தமைக்கு அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், பாராட்டுதலையும் மிகுந்த பணிவன்போடு மீண்டும் ஒரு முறை தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு ஆளும் கட்சித் தரப்பிலும் மற்றக் கட்சிகள் தரப்பிலும் பேசிய உறுப்பினர்கள், இந்தப் பிரச்சினையில் நாம் இன்னும் வேகம் காட்டவேண்டு மென்று கூறியிருந்தாலும், வேகம் காட்டவில்லையென்று கூறியிருந்தாலும் இரண்டையும் நான் மத்திய அரசை வலியுறுத்துவதற்கேற்ற நல்ல படைக்கலன்களாக எடுத்துக் கொண்டு, அவர்கள் பேசிய அந்த வார்த்தைகளை மத்திய அரசோடு இந்த அரசு வாதிடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைத்துக்கொண்டு நிச்சயமாக அரசு வாதிடும் என்ற உறுதியை மீண்டும் ஒரு முறை இந்த மன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரு குறிப்பிட்டதைப் போல இந்தப் பிரச்சினை மைசூர் மாநில மக்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் இடையிலே ஒரு மனக்கசப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் 1968-ம் ஆண்டு முதல் இது வரையிலே இந்த மன்றத்தில் உள்ள உறுப்பினர்களும், தலைவர்களும் மிகுந்த அக்கறைகாட்டி வந்திருக்கிறார்கள் என்பதை நாடு நன்றாக அறியும். ஆனால் நாம் காட்டி வருகிற இந்த அக்கறையும், போற்றி வளர்த்து வருகிற இந்தப் பண்பாடும், நாம் உருவாக்கியிருக்கிற இந்த நல்லெண்ண முயற்சிகளும் மைசூர் மாநில அரசின் சார்பிலே காட்டப்படவில்லையென்பதை மாண்புமிகு சுதந்திராக் கட்சியினுடைய தலைவர் டாக்டர் ஹாண்டே அவர்கள் இங்கே சில பல ஆதாரங்களின் மூலமாக எடுத்துக்காட்டினார்கள்.