பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா



ஆட்டம் முழுவதும் (கொஞ்சங் கொஞ்சமாக) எண்ணிக்கை அளவில், பந்தெறியப்படுவதாலும் தவணை முறை என்பது வாழ்க்கை நடைமுறையில் இருப்பதாலும், 'தவணை' என்ற சொல்லையே இங்கு பயன்படுத்தி இருக்கிறேன்.

பந்தெறி தவணை (Over) கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றில் 1744ம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. கிரிக்கெட் ஆட்டத்திற்கான ஒரு புதிய மறுமலர்ச்சி மிகுந்த வடிவம் கொடுக்கத்தக்க வழிகள் அமைக்கப்பட்ட ஆண்டாக இது இருப்பதே காரணம். 1744ம் ஆண்டு விதியின்படி ஒரு பந்தெறி தவணைக்கு 4 முறை பந்தெறிவதற்கே அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆரம்ப காலத்தில் இவ்வாறு தொடங்கிய முறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இங்கிலாந்து நாட்டின் கிராமப்புற கிரிக்கெட் ஆட்டங்களில் ஒரு தவணையில் 6 முறை பந்தெறியும் பழக்கம் இருந்து வந்ததாகவும் அறியப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்காலப் பகுதியில், ஒரு பந்தெறி தவணைக்கு 5 பந்தெறிகள் அல்லது 6 பந்தெறிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதல்ல. என்றாலும் எலலா ஆட்டக்காரர்களும் இதையே ஏற்று ஆடிக்கொண்டிருந்தனர். இந்த 5 அல்லது 6 பந்தெறி வாய்ப்பு முறை 1884-85ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் முதல் தர போட்டி ஆட்டங்களின் 6 முறை பந்தெறியும் ஆட்டமுறை இருந்து வந்தது என்றாலும், ஆஸ்திரேலியா 1918ம் ஆண்டு 8 முறை பந்தெறியும் வாய்ப்பினை அறிமுகப்படுத்திவிடத் தொடங்கி விட்டது.