பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

71


ஒரு பந்தடி ஆட்டக்காரர், தனது விக்கெட்டைக் காத்து நின்று கொண்டிருக்கும் நிலையில் இருந்து, எவ்வளவு முயற்சித்தாலும் பந்தைத் தனது பந்தாடும் மட்டையில் எட்டி அடிக்க முயற்சித்தும் எட்டாத தூரத்தில் அந்தப் பந்து எறியப்பட்டிருந்தால், அதுவே எட்டாத பந்தெறி என்று முடிவெடுக்குமாறு கூறினர்.

ஆகவே, நடுவர்களுக்கு மிகவும் எளிதாகக் கண்காணிக்கின்ற அளவுக்கு விதி நெகிழ்ந்து தந்தது. இன்னும் ஒரு இனிய குறிப்பினையும் இங்கே காணலாம். பந்தெறியாளரது கையிலிருந்து வருகிற பந்து, வேகமிழந்து, அடித்தாடுபவர் முன்னே வந்து கிடந்தால், அது எட்டாத பந்தெறி என்று சிலர் எண்ணினார்கள். அதை எட்டாத பந்தெறியல்ல, அடித்தாடுவோர் அது முறையான பந்தாகவே கருதி அடித்தாடிவிடலாம் என்ற விதிக்குறிப்பினையும் தந்தனர்.

இவ்வாறு பந்தெறி முறையில் எட்டாத பந்தெறி தோன்றி, புதுக் குழப்பத்தை விளைவித்து, பிறகு தெளியவைத்து, ஒரு முக்கிய விதியாகவே மாறிய வரலாற்றை மேலே கண்டோம். அடுத்த பகுதியில் 'விக்கெட்டின் முன்னே கால்' (LBW) என்ற விதி வளர்ந்த விதத்தைக் காணலாம்.

7. விக்கெட்டின் முன்னே கால் (L.B.W.)

விக்கெட்டின் முன்னே கால் இருந்ததா என்று பார்க்கப் பயன்படுகின்ற விதியானது, தோன்றிய நாளிலிருந்தே தொல்லைதரும் விதியாகத் தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. விளக்கத்திற்குரிய விதியாக அமையாமல், விவாதத்திற்குரிய விதியாக இருப்பதால், நடுவர்களுக்கு விடுகின்ற ஒரு சவாலாகவே சதிராட்டம் போட்டுக்கொண்டு விளங்குகிறது.