பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


இருக்கக் கண்டு இவர் உள்ளம் மகிழ்ந்தார். இவ் வகையில் போப்பையர் மனத்தைக் கவர்ந்த குறள்களில் இரண்டொன்றைப் பார்ப்போம்.

"ஒறுத்தார்க்(கு) ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்“

என்ற குறள் இவர் உள்ளத்தை அள்ளுவதாயிற்று. கிருஸ்து நாதரது வாழ்க்கையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவதுபோல் தோன்றிற்று இப்பாட்டு. தீயவர் பலர் கிருஸ்து நாதரைத் துன்புறுத்தினார்கள் ; கழியால் அடித்தார்கள் ; அவர் மீது காறி உமிழ்ந்தார்கள். இவ்வாறு அவரை ஒறுத்த சிறியோர் ஒரு நாளை இன்பத்தையே பெற்றார்கள். ஆனால் அச்சிறுமை யெல்லாம் பொறுத்திருந்த கிருஸ்து நாதரோ உலகமுள்ளளவும் அழியாப் புகழ் பெற்றார். இவ்வுண்மையைக் குறட்பாவிலே கண்டு இன்புற்றார் போப்பையர். இன்னும் தீமை செய்தவர்க்கும் நன்மையே செய்தல் வேண்டும் என்பது திருவள்ளுவர் கொள்கை. "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்“ என்பது வள்ளுவர் வாக்கு. கிருஸ்து நாதரைப் பகைவர்கள் சிலுவையில் அறைந்த பொழுது அவர் பேசிய வாசகத்தின் பொருளும், வள்ளுவர் குறளின் பொருளும் ஒன்றுபட்டிருக்கக் கண்டார் போப்பையர். தம் கையிலும் காலிலும் இருப்பாணி அறைந்து பொறுக்க முடியாத துயரம் விளைத்த பகைவரைக் கிருஸ்து நாதர் வெறுத்தாரல்லர் ; சபிக்க நினைத்தாரல்லர் ; அக்கொடியாரிடம் இரக்கம் கொண்டார்; அவரை மன்னிக்கும்படி ஆண்டவனை வேண்டிக்கொண்