பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வேதநாயகம் பிள்ளை


என்று திருஞானசம்பந்தர் போற்றிப் புகழ்ந்த [1]புள்ளிருக்குவேளூர் சீர்காழிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இன்னும், நற்றமிழ்ப் பாடல்களை ஒற்றறுத்துப் பாடும் வண்ணம் ஞானசம்பந்தருக்கு ஈசன் பொற்றாளம் ஈந்தருளிய கோலக்காவும் சீர்காழியை அடுத்துள்ள சிவப்பதியாகும்.

இத்தகைய சீர்காழியிலிருந்து மாயூரத்திற்கு முனிசீபாக மாற்றப்பட்டார் வேதநாயகர். பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல இசைப் பாட்டில் ஆசையுற்றிருந்த வேதநாயகர்க்கு மாயூரத்தில் சிறந்த இசைவாணர் பழக்கம் ஏற்பட்டது. 'நந்தனர் கீர்த்தனம்' பாடிப் புகழ்பெற்ற கோபால கிருஷ்ண பாரதியார் அப்போது அவ்வூரில் இருந்தார். அவர் பாடிய கீர்த்தனம் வேதநாயகர் உள்ளத்தைக் கவர்ந்தது. இசைப் பாட்டில் ஈடுபட்ட இருவரும் நாளடைவில் நண்பராயினர்.

மாயூரத்தில் வேதநாயகர் நீதிபதியாக இருந்த போது வல் வழக்குகள் நீதி மன்றத்திலே வரக்கண்டு மனம் வருந்தினார். அவ் வழக்குகளின் தன்மைக்கு அவரே ஒரு சான்று காட்டியுள்ளார். "கரமிலான் ஒருவன் வாதியைப் பிடித்தான் ; காலிலான் அவனை உதைத்தான்; வாயிலான் அவனைக் கடித்தான் ; இப்படிப் பிடித்து, உதைத்து, கடித்தவர்கள் மீது வாதி வழக்குத் தொடுத்தான். அவனுக்காக விறு விறுப்புடன் வாதாடி வம்பு செய்தார்கள் வக்கீல்கள்.


  1. புள்ளிருக்குவேளூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கும்.