பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேதநாயக சாஸ்திரியார்

73


தமிழ் நாட்டில் நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபடும் பாமர மக்கள் பாட்டுப் பாடிக் கொண்டே பணி செய்தல் வழக்கம். நிலத்தில் ஏரைப் பிடித்து உழும் பொழுதும், நாற்று நடும் பொழுதும், களை பறிக்கும் பொழுதும், பாட்டாளிகள் பாட்டுப் பாடுவார்கள். தோட்டப் பயிர் செய்பவர்கள் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து நிலத்திலே பாய்ச்சும்போது பாடுவார்கள். அப்பாட்டுக்கு 'ஏற்றப் பாட்டு' என்பது பெயர். அதன் இனிமை யறிந்தோர் ”ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு இல்லை” என்பர். "மூங்கில் இலை மேலே, தூங்கும் பனி நீரே, தூங்கும் பனிநீரை, வாங்கும் கதிரோனே” என்ற ஏற்றப் பாட்டு நாடறிந்த தாகும். ஏழை மக்களே பெரும்பாலும் ஏற்றமிறைத்துப் பணி செய்பவர் என்பதை யறிந்த வேதநாயகம் அவர்களுக்கு ஏற்றப்பாட்டின் வாயிலாக ஞானத்தை ஊட்டக் கருதினார். அவ்வகையில் நூறு செய்யுள் இயற்றியுள்ளார்.

ஒரு பொருளே தெய்வம்- நீ
உகந்து தொழு நெஞ்சே
உடைந்து மனம் நெஞ்சே-அந்த
ஒரு பரனுக் கஞ்சே

என்பது முதற் பாட்டு, அந்நூல் ஞான ஏற்றப் பாட்டு என்று பெயர் பெற்றுள்ளது.[1]


  1. இரண்டு மரஞ் செய்தான்-அதில்
    ஒன்றருந்தத் தீது
    பண்டுவில காது-பவம்
    கொண்டு வந்தாள் மாது”

    என்பது மற்றொரு பாட்டு.