பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/95

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

முடிவுரை


லாம் இப்பொழுது தூர்ந்து அழிந்து கிடக்கின்றன. இன்னும் நெல்லை நாட்டிலுள்ள ஆதிச்சநல்லூர் மேட்டிலும், புதுச்சேரியைச் சேர்ந்த அரிக்கன் மேட்டிலும் பழைய நாகரிகம் புதைந்து கிடப்பதாகத் தெரிகின்றது. ஜாகர் என்னும் ஜெர்மானிய அறிஞர் ஆதிச்சநல்லூர் மேட்டின் ஒரு பாகத்தை அகழ்ந்து ஆராய்ந்தார் ; கண்டெடுத்த பழம் பொருள்களைப் பெர்லின் நகரத்திற்குக் கொண்டு சென்றார்[1]. அதனை அறிந்த இந்திய அரசாங்கத்தார் ரேயர் என்ற ஆங்கில அறிஞரை யனுப்பி அம்மேட்டை ஆராய்ந்தனர் ; எளிதிற் கிடைத்த பொருள்களைச் சென்னைக் காட்சிச்சாலையில் வைத்தனர்[2]. ஆயினும் நூறு ஏக்கர் அளவுள்ள ஆதிச்சநல்லூர் மேடு பழம் பொருளடங்கிய பண்டசாலையாக இன்றும் ஆராய்ச்சியாளர் வருகையை எதிர் நோக்கி நிற்கின்றது. இவ்வண்ணமே புதுவை நாட்டில் செஞ்சியாற்றின் கரையிலுள்ள அரிக்கன்மேடு, ஒரு புதையுண்ட நகரமாயிருத்தல் கூடும் என்று சில அடையாளங்களாற் கண்டு, பிரஞ்சு அரசாங்கத்தார் அதனை ஆராய்வதற்கு இசைந்துள்ளனர்[3].

இங்ஙனம் தமிழகத்தில் அடங்கிக் கிடக்கும். நாகரிகச் சின்னங்களைத் துலக்கினால் தமிழ் நாட்டின் பழம் பெருமை விளங்கும் என்று கருதினார் கால்டுவெல் ஐயர். சென்னைச் சர்வ கலாசாலைப் பெரு விழாவில் அவர் இக் கருத்தை


  1. Tinnevelly Gazetteer, p 424.
  2. Madras Museum
  3. செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு, 18