பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


விழாவானது பக்தியை வெளிப்படுத்தாமல் போனதால் தான், விழா வேடிக்கை என்ற பெயரையும் பெற்றது. இங்கே நாம் எண்ணிப் பார்ப்பது நல்லது.

மக்களை ஒன்று திரட்ட, மன்னர்களும், மதவாதிகளும் உண்டாக்கிய சந்தர்ப்பங்களே, மதவிழாக்களாக மாறிவந்தன. அதனால்தான் ஏகப்பட்ட விழாக்களும் ஏற்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு விழாவின் ஆரம்பகாலத்தைக் குறித்துக் காட்ட, குழலூதியும் கொம்பூதியும் (Trumpet) மக்களுக்கு அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு ஏன் என்றால், விழா நாட்களில், மக்கள் அனைவரும் வேலைக்குப் போகாமல், ஓய்வாக இருக்க வேண்டும் அத்துடன், அமைதியான மனதுடன் பிரார்த்தனையும் செய்ய வேண்டும். இந்த அறிவிப்பு, இதற்காகத்தான் முதலிலேயே தரப்பட்டது.

விழாக் காலத்தில், இறைவனைத் தரிசித்து வேண்டிக் கொள்கிறபோது, வெறும் தானிய வகைகளைக் காணிக்கையாகக் கொடுக்கும் பழக்கம் மட்டும் இல்லாமல், இரத்த பலிகொடுக்கின்ற புதுப்பழக்கத்தையும் மக்கள் மேற்கொண்டார்கள்.

இரத்தபலி கொடுக்க, ஆடுகளே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு, பலியாயின. இப்படி கொடுக்கின்ற இரத்த பலியானது, தருகின்ற மக்களின் பாவங்களை இறைவன் மன்னிக்கின்றான் என்கிற குருட்டு நம்பிக்கை, மக்களிடையே பரவிக் கிடந்தது.

சில சமயங்களில், விழாக்களின் போது, இறைவனுக்குப் பழங்களைப் படைத்து மகிழ்கின்ற பழக்கமும் தொடர்ந்து வந்திருக்கிறது.

நம் தமிழ் நாட்டில், பழம் பூக்கள் போன்றவை படையல் பொருட்களாகத் திகழ்வது, நமக்கெல்லாம் நன்கு தெரியும்.