பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10


“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”

என்னும் வாக்கியம் எந்நாட்டவர்க்கும் பொதுவன்றோ ? இவர்கள் உழுத பயனால் தானியங்களையும் திராட்சைப் பழங்களையும், ஒலிவக் கொட்டைகளையும் பெற்றனர். ஒலிவக் கொட்டைகளை நசுக்கி அவற்றின் மூலம் எண்ணெய் எடுத்தனர். அந்த எண்ணெய் இருவகையில் இவர்கட்குப் பயன்பட்டது. இஃது உணவுப் பொருள்களைச் சமைப்பதற்கு எண்ணெய்க்குப் பதிலாக உபயோகப்பட்டது. இதனோடு ஆடைகளை வெளுக்கச் சவுக்காரத்திற்குப் பதிலாகவும் பயன்பட்டது. நிலங்களை உழுவதற்குக் கோவேறு கழுதைகளும் எருதுகளும் துணைபுரிந்தன. நிலங்களுக்கு உரியவர்களே அறுவடை செய்வதற்கு இயலாதவராயின் அவர்களின் பொருட்டுக் கூலியாட்களை அமர்த்தி அறுவடை செய்து வந்தனர். அவ்வழக்கம் நாம் கொண்டுள்ள உழுதுண்ணல், உழுவித்துண்ணல் என்னும் பழக்கங்களை நினைவுபடுத்துவதேயாகும். நிலங்களை உழுது பயன் கொள்வதோடு நில்லாமல், அக்கேயர்கள் ஆடு, மாடு,பன்றி முதலான விலங்கினங்களையும் வளர்த்து அவற்றின் பயனையும் அடைந்து வந்தனர். இம்மூவின விலங்குகளில் மாடுகளே இவர்கள் பெரிதும் மதித்துவந்த செல்வமாகும். மாடுகளைச் சிறந்த செல்வமாக மதிக்கும் வழக்கம், தொன்று தொட்ட வழக்கமாகும். இவ்வாழ்க்கைகளை எல்லாம் பார்க்கையில், நம் தமிழரது மருதநில வாழ்வும், முல்லை. நில வாழ்வும் நினைவுக்கு வருகின்றன. நம் தமிழ்