பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

குற்றவாளியைத் திடுமெனக் கூப்பிட்டோ, அழைத்து வரவோ செய்யமாட்டார்கள். இன்ன நாளில் குற்றம் விசாரிக்கப்படும் என்று முன்னதாகக் கடிதம் விடுத்து அறிவிப்பர். அந்த நாளில் வாதி, பிரதிவாதி ஆகிய இருதிறத்தவர்களும் நடுவர் முன்வந்து சேரவேண்டும். அது போது விசாரணை நடக்கும். இருதிறத்தார் வாக்கு மூலங்கள் விசாரிக்கப்பட்டு, அவற்றுள் இன்றியமையாதனவற்றை யெல்லாம் பதிவு செய்து, ஒரு பெட்டகத்தில் வைத்து அரண் செய்வர். அடிமைகள் சாட்சி கூற அழைக்கப்படுவர். ஒரு வழக்கைத் தீர்க்க வேண்டின் அதற்கு ஆட்சி, ஆவணம், காட்சி என்னும் முத்திறத்தாலும் ஆய்ந்தே தீர்ப்புக் கூறப்பட்டது. இம்முறை கையாளப்பட்டு வந்தது என்பதைச் சுந்தரர் வரலாறும் நமக்கு அறிவிக்கின்றதன்றோ ! நீதிமன்றத்தினர் அடிமைகளை அழைப்பர். அவர்கள் உண்மை கூறாதிருப்பரேல் அடித்து உண்மையை வெளிப்படுத்துவர். கீழ் மக்கள் வருத்தினாலன்றிப் பயன்படுவரோ ? வள்ளுவரும்

'சொல்லப் பயன்படுவர் சான்றோர் : கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்'

என்று அன்றே கூறியுள்ளார்.

தீர்ப்புக் கூறுவதற்கு முன் பல வழிகளில் கேட்க வேண்டிய கேள்விகள் கேட்கப்படும். நீதிபதி தமக்குத் துணையாக ஜூரிகள் சிலரைக கொண்டு தீர்ப்புக் கூறுவர். ஜூரிகள் கூறும் தீர்மானமே வழக்கிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.