பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

ஆனால், அடிமைகள் மட்டும் அவ்வப்போது மாறி மாறி வேலை செய்ய வேண்டும். ஓர் அடிமை செய்ய வேண்டிய வேலை நேரம் பத்துமணியாகும். இவ்வாறு இந்தச் சுரங்கங்களில் பணிபுரியும் அடிமை நிலைதான் வருந்தத்தக்கது. இவர்கள் இங்கு வேலை செய்வதினும் இறப்பதே மேல் என்று கூட எண்ணும்படி இருக்கும். இவ்வாறு இவர்கள் கஷ்டப்பட்டதனால்தான் இவர்களில்பல்லோர் பிலோபோனேசியன் (Pelopponnesian) சண்டையிலும் சேர்ந்து உயிர்விடத் துணிந்தனர். சுரங்க அடிமைகளின் வாழ்வு இவ்வாறு இருந்தது என்பது தான் வருந்த வேண்டியிருக்கிறது, அக்காலத்தில் ஆபிரகாம்லிங்கன் போன்ற அடிமை வாழ்வை அகற்ற முன்வரும் அன்பர்கள் ஏதென்ஸ் நகரில் தோன்றியிலர் போலும்!


9. தொழிலும் வாணிகமும்

செல்வர் இன்பம் அடைய வறியர் உழைக்க வேண்டியது அன்றும், இன்றும், என்றும் உள்ள ஒரு கொள்கை போலும்! ஆதலின், ஏதென்ஸ் நகரில் இருந்த செல்வர்கள் தம் வாழ்நாளை உழைப்பின்றி இன்பமாகக் கழித்து வந்தனர் எனலாம். ஏதென்ஸ் நகர மக்களில் பலர் வறியராகவே இருந்தனர். அவர்கள் தம் தினசரி வாழ்வு நடத்த உழைத்தே தீர வேண்டியவராயினர். ஏதென்ஸ் நகரில் வாணிகத்திற்கும் இயந்திரக் கைத்தொழிற்கும் வளர்ச்சி இருந்தது என்றாலும், அந்நகர மக்களில் பலர் உழவுத் தொழிலேயே மேற்கொண்டு உழைத்து வந்தனர். ஒவ்வொரு நகர வாசியும், சிறு நிலமேனும்