பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள் 9

  அவள் தாய் தங்க நிறம். அதை அவள் தக்க விலைக்கு விற்க முடிந்தது. வைர வியாபாரி அவளைக் குத்தகைக்கு எடுத்தான் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
  இரண்டு வீடுகளை அவள் பெயருக்கு எழுதி வைத்தான். ஒன்று அவள் குடியிருப்பதற்கு ; மற்றொன்று அவள் குடித்தனம் நடத்துவதற்கு. அதன் வாடகைப் பணம் வீடு தேடி வந்தது. அதை அவள் வங்கியைத் தேடிச் சேமித்தாள். வசதிகள் வந்த அவன் அசதியைப் போக்கின; அவன் தங்கும் மடம் அது ஆகியது.
  அவள் இன்று சாயி பக்தர். பங்காரு அடிகள் அவளுக்கு விதிவிலக்கு அல்ல. வயிறு தெரியும் அவர் படம் மாட்டப்பட்டிருந்தது.
  காமகோடி அவள் வீட்டு மேல்மாடியில் இடம் பெற்றிருந்தார். 

"நான் இருக்க பயமேன்?" என்று அபயம் அளித்த உருவப்படம் அவளுக்கு நம்பிக்கை அளித்தது. அவள் சாயி பக்தர். அதனால் அவள் வீட்டு நாய் தவிர மற்ற எல்லாவற்றிற்கும் அவர் பெயர் சூட்டு விழா நடத்தியிருக்கிறாள். "சாயி நிலையம்" என்றும் அந்த வீட்டுக் கல் அறைந்து கொண்டிருந்தது.

  இப்படித்தான் வாழ வேண்டும் என்பது சம்பிரதாயம். சமுதாயக் கட்டுக்கோப்பு; இவற்றை அவள் மதித்தவள்தான். ஆனால் எப்படியும் வாழலாம்; நாங்கள் விதிவிலக்குகள் என்று சமாதானம் கூறினாள்.
  அந்த அம்மையார் அடிக்கடி கோயிலுக்கு வருவார். நெற்றியில் பொட்டு; அது சிகப்பு; தங்க நிறம்; அதனால் அவள் முகத்துக்கு மஞ்சள் நிறம் தேவைப்படவில்லை. அது மறைந்து கிடந்தது. அதை அவன் விரும்பியது இல்லை. அவன் வாங்கித் தந்த வண்ணப் பொடிகள் மணமும் தந்தன.