பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாவேந்தர் கருத்து

குடும்ப முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்.

முன்னேற்றம் உடைய குடும்பம் எப்படி இருக்கும் என்பது பற்றிய என் எண்ணந்தான் இந்தச் சிறிய நூல் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம்!

இந்நாளில் சிறிது கூடுதலான வருவாய் ஏற்பட்டவுடன் துணைவியர் உடல் நலங்காமல், உடை நலங்காமல், வேளைக்குச் சாப்பிடுவதுதான் குடும்ப ஒழுக்கம் என்று நினைத்து விடுகிறார்கள். பெண்களிடமிது பெருவழக்கமாகி வருகிறது. கணவன்மாரும் இந்நிலை முழுத்தன்மை வாய்ந்தது என்று முடிவு கட்டுகிறார்கள்.

கற்றலும் அதற்குத்தக நிற்றலும் நிறைய அமைந்திருக்க வேண்டும். துணைவியிடத்தும் கணவனிடத்தும். இந்த நிலையில் அங்குத் தோன்றும் பிள்ளைகள் எப்படி இருப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இத்தகைய குடும்பத்தில் எடுத்ததற்கெல்லாம் வேலைக்காரன், வேலைக்காரி வேண்டாம். அனைத்துக்கும் பிறர் கையை எதிர்பார்ப்பது நிலையற்ற செய்கை; எப்போதும் எதிர்பார்க்கக் கூடியதன்று, ஏனென்றால் 'எல்லாரும் வேலைக்காரர் அல்லர்; எல்லாரும் உடையவர்' என்ற நிலையை உண்டாக்கத்தான் அறிவுலகம் விரைந்து வேலை செய்கிறது. இவ் வையகத்தின் நோக்கமும் அதுதான். குடும்பவிளக்கில் வேலையாட்களுக்கு இடம் ஏற்படுவதில்லை.

தமிழ் நாட்டின் பண்டைய அறிஞர்கள் கண்ட குடும்பங்கள் நமக்குச் சீவகன் முதலிய பெருநூற்களிற் காட்சியளிக்கின்றன. இன்றைய நிலையில், எளிய நடையில் அமைந்த "குடும்ப விளக்கு" ஒரு நடுத்தரக் குடும்பம் இது என்று திட்டமாகச் சொல்லாவிட்டாலும் கோடி காட்டியதாகவாவது இருக்கும்.

குடும்பு விளக்கைப் பெறும் தோழர்கள் நாமேயன்றி, மறந்து போகாமல் தம் துணைவியர்க்கும் படிக்கக் கொடுக்க துணைவியர் எழுத்தறிவில்லாராயின் படித்துக் காட்டுக! துணைவர்க்கு எழுத்தறிவு இழுப்பாய் இருந்தால் துணைவியர் சொல்லிக்காட்ட மறவாதிருக்க வேண்டுகிறேன்.

ஏனெனில்,

தலைவனிடம் தலைவி நடந்துகொள்ள வேண்டிய சிலவற்றைத் தலைவன் அன்பு காரணமாகச் சொல்லப் பின்வாங்குவது உண்டு. அவ்வாறே தலைவியும் பின்வாங்குவது உண்டு. அப்படிச் சொல்லவேண்டிய சிற்சிலவற்றைக் குடும்ப விளக்குச் சொல்லும்.

–பாரதிதாசன்