பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படைப்புகளுக்குப் பயன்படுவதால் மக்கள் இன்புற்று வாழ்வர்: மண்ணகம் விண்ணக மாகும்.


புகழ்

மானிட வாழ்க்கையின் பயன் புகழ். எது புகழ் ? விளம்பரம் வேறு; புகழ் வேறு. முகமன் வேறு; புகழ் வேறு. இரப்பார் கொடுப்பாரைப் பாராட்டிக் கூறும் உரைகள் புகழாகா. புகழ் உயர்ந்தது; உலகில் உயர்ந்தது. ஒருவரின் சாதனையை அனுபவித்த ஒருவர் மகிழ்ந்து, தம் உள்ளம் நெகிழ்ந்து மொழியும் சொற்களே புகழ்! புகழ் அஃது ஒரு வேள்வி. புகழ் எளிதில் கிடைக்காது. வள்ளுவத்தின் வாழ்க்கைநெறிகள் அனைத்தையும் பின்பற்றி நெறிமுறை பிறழாது வாழ்ந்தால் புகழ் வந்து பொருந்தும். அஃதென்ன எளிய காரியமா? புகழ்பட வாழ விரும்பினும் நம்முடைய பழையபழக்கம் இழுத்துத் தள்ளுகிறது. தன்னயப்பு உணர்வுகள், தன்னலமறுப்புக்குத் தடை செய்கின்றன. தட்டுத்தடுமாறிச் சமுதாயச் சந்தையில் வீழ்ந்து அதன் துணை கொண்டு புகழ் வேள்வி நிகழ்த்தலாம் என்றால் அங்கே பேரிரைச்சல்! பச்சை நிர்வாணமான சுயநலக்கூட்டம் பேயாட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறது. அரசுப் பணிமனை முதல் ஆண்டவன் சந்நிதி வரை மனிதன் தன் உரிமைகளைப் போராடிப்பெற முடியவில்லை. பரிந்துரைச் சீட்டுகள், கையூட்டுகள் எங்கும் மலிந்து கிடக்கின்றன. ஏன் அம்மையாக, அப்பனாக விளங்கும் ஆண்டவனையே காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஆரத்தழுவி உச்சிமோந்து வழிபாடியற்ற அவன் உரிமையில்லாதவனாக இந்திய உயர்நீதி மன்றம் செய்து இருக்கிறது. இந்தச் சமுதாயத்தில் அவன் எப்படிப் புகழ் பெறுவான்? கழனியில் வேளாண்மை செய்யவரும் உழவன் காடு வெட்டி நிலந்திருத்த வேண்டும். அதுபோலச் சமுதாய நன்மைக்கு எதிராக இருக்கும் தீமைகளை அடியோடு களைந்திடல் வேண்டும்.