பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற"

(34)

என்று வள்ளுவம் கூறுகிறது. ஆதலால் மானிடரின் புலன்களைத் துய்மை செய்து, சீலம் பெருக்கி மனத்தின் கண் தூய்மையைச் சேர்த்து அகவாழ்க்கையை வளர்த்து, அவ்வழி புறவாழ்க்கையையும் வளர்த்து வழி நடத்தி வாழ்விப்பது உயர் சமய நெறியின் நோக்கம்; பயன்.

உயிர், துய்த்தலுக்குரியது. இன்புறுதலுக்குரியது. ஆதலால், சமய வாழ்க்கையின் அடிப்படையில் துய்த்தல் நெறிக்கு மாறான - துய்த்தல் நெறியை அடக்குகின்றபொறிகளை, புலன்களை அழிக்கின்ற - வறட்சித் தன்மை யுடைய துறவை உயர்ந்த சமயம் ஏற்பதில்லை. அதனால், சமய நெறியில் துற்வேயில்லையென்று பொருள் கொள்ளற்க. துறவு உண்டு; எல்லாருடைய வாழ்க்கையிலும் துறவு இருத்தல் வேண்டும். துய்ப்பு வாழ்க்கை துறவுடன் தொடர்பு கொண்டிருந்தால்தான் சிறக்கும்; இன்பம் கிடைக்கும். உயிர்கள் தத்தம் வளர்ச்சி எல்லைக்கண் நின்று வாழ்தல் வேண்டும். இயற்கையோடு இசைந்த வாழ்க்கையே இறைநெறி சார்ந்த வாழ்க்கை. ஆதலால் தமிழர்தம் வாழ்க்கையில் மேற்கொண்டொழுகிய சமயதெறியில் பெண்ணை வெறுத்தலும், மனையறத்தை வெறுத்தலும் இல்லை. தமிழர் போற்றிய பெண்ணின் பெருமைக்கும் அகனைந்திணை வாழ்க்கைக்கும் புறச்சமயங்கள், அயல் வழக்குகள் முரண்பட்டு இருந்ததனால்தான் நம்முடைய நாயன்மார்கள் அந்தப் புறச்சமயங்களை எதிர்த்துப் போராடித் தமிழினத்தின் சமயநெறியை - அகனைந்திணை ஒழுக்கத்தைப் பேணிப் பாதுகாத்தனர். ஆதலால்தான் இல்லறத்தை அறத்துப்பாலின் முதனிலையில் வைத்து ஒதுகிறார் திருவள்ளுவர்.