பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 145


அவர்கள் வாழவேண்டுமென்று ஆசைப்படக்கூட மறுக்கிறார்கள். ஊனுடலுடன் உலா வந்து, உண்டுடுத்திச் செத்துப் போதலும் வாழ்க்கையோ? இது பிழைப்பு. பிழைக்க யாருக்குத்தான் தெரியாது? தெருவுதோறலையும் ஊர் நாய் கூடத்தான் பிழைத்து விடுகிறது. வாழ்க்கையென்பது ஒரு அருமையான கலை நுணுக்கம் உடையது; நெடிய வரலாறுடையது; உயர் இலக்கு உடையது. வாழ்க்கையின் அருமைப்பாட்டினை உணர்த்து வாழ்தலே வாழ்க்கை. நல்லதோர் வீணையானாலும் அதனை மீட்டத் தெரிந்தால் தானே இசை இன்பம்! அதுபோல வழியோடும் வகை யோடும், அறிவோடும் தெளிவோடும், உயிரோடும் உணர் வோடும், படைப்பாற்றல் நோக்கோடும் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை. இதனை வள்ளுவம்,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

(50)

என்று கூறுகிறது. வாழ்வாங்கு வாழ்கிற வாழ்க்கைக்குத் துணை செய்வது சமயம், அகநிலைச் சார்புடையது; புலன் களைத் திருத்தத் துணைசெய்வது சமயசீலங்கள் பொறிக ளோடு தொடர்புடையன அல்ல, பொறிகளின் தூய்மைக் கேட்டுக்கு அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். புலன்களின் துய்மைக்குச் சமயம் துணை செய்கிறது. "புலனழுக்கற்ற அந்தணாளன்” என்று சங்க காலப் பாடல் சமய வாழ்க்கையைக் குறிப்பிடுதலை உணர்க. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற இவற்றின் வகைதெரிந்து வாழ்வோரே சமயநெறி நிற்போர்.

"சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் என்றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு"

(27)

என்ற வள்ளுவம் அறிக. புலன்கள் தூய்மையானால் பொறிகள் துய்மை நெறியில் இயல்பாக இயங்கும். தனாலன்றோ, தி. 10.