பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நூல்களைப் பயிலுந்தொறும் இன்பம் கிடைக்கிறது. படித்த நூல்தானே என்று ஒதுக்கமுடியாது. கற்குந்தொறும் புதிய புதிய பொருள் இன்பம் தந்து அறிவின் ஆக்கம் தொடர்ந்து வளர்கிறது. கற்கக் கற்க, கங்கு கரையற்ற புதிய புதிய புத்தறிவு உணர்வுகளைத் தரும். அங்ஙனம் தருவன தாம் சிறந்த நூல்கள். இத்தகைய சிறந்த நூல் உலகத்தில் மக்களாகப் பிறந்தோர் பேசும் வேறு எம்மொழியிலும் தோன்றாமல் தமிழிலேயே தோன்றியிருப்பது பழங்காலத் தமிழகத்தின் வரலாறு தந்த சிறப்பு. அந்நூல் எது? திருக்குறளைத் தவிர வேறு எது? ஒரு மறைநெறியை வளராமல் தடுக்க நான்மறைகள் முற்றுகையிட்டன என்றால் அந்த ஒரு மறையின் அருமைப்பாட்டை என்னென்று கூறுவது? புகழ் பூத்து விளங்கிய பழந்தமிழகத்தின் வாழ்க்கை நெறியைத் தமிழினம் மீண்டும் காண நான்மறைநெறிகள் துணை செய்யா, தமிழினத்துக்கு ஒரு மறையாக, மனித உலகத்துக்குப் பொது மறையாக, விளங்கும் திருக்குறளே துணை செய்ய முடியும். இதனை உணரும் நாளே தமிழகத்தின் புதிய வரலாறு தொடங்கும் பொற்காலம்.

"நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு" (783)

என்பது திருக்குறள். நவில் தொறும் நயம் தரும் நூல் திருக்குறளேயாம். திருக்குறளைப் பயிலப் பயில இயல்பிற் பெறாத நுண்ணறிவுகூடத் தலைப்படுகிறது; வள்ளுவம் காட்டும் நூலறிவும் சிறக்கிறது; இன்புறுத்தி இனிய வாழ்வை அமைக்கிறது. பண்புடையாளர் நட்பும் அத்தகையது. பண்புடையாளனின் நட்பு பயிலுந்தொறும் புதுநல இன்பம் தரும் வளரும். உண்மையிற் சொன்னால் இன்றைய சூழ்நிலையில் நம்மில் யாருக்குமே நண்பர்கள் இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. தெரிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள்; வேண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள்; உடனிருப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். இவர்களில் யார் நண்பர்?